அமெரிக்க ஓபன் டென்னிஸ் : சாதனையை சமன் செய்து விடுவாரா?

Photo of author

By Parthipan K

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று தொடங்குகிறது. கொரோனா வைரஸ் பரவலால் விம்பிள்டன் உள்பட பல தொடர் ரத்தான நிலையில் நடக்கும் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டி இதுவாகும். சாப்பிடும் போது தவிர எப்போதும் முககவசம் அணிந்திருக்க வேண்டும், ஸ்டேடியம் பகுதியில் நுழையும் போது உடல் வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும், எழுத்துப்பூர்வ ஒப்புதல் இன்றி வெளியே சென்றால் போட்டியை விட்டு நீக்கப்படுவார்கள் உள்ளிட்ட கடும் பட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. பெண்கள் பிரிவிலும் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), நவோமி ஒசாகா (ஜப்பான்), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான சோபியா கெனின் (அமெரிக்கா), ஜோஹகன்னா கோன்டா (இங்கிலாந்து), சபலென்கா, அஸரென்கா (பெலாரஸ்) உள்ளிட்டோர் வரிந்து கட்டி நிற்பார்கள்.

இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள 38 வயதான செரீனா வில்லியம்ஸ் இங்கு வாகை சூடினால், அதிக கிராண்ட்ஸ்லாம் ருசித்தவரான ஆஸ்திரேலியாவின் மார்க்கரேட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்து விடுவார். ஆனால் குழந்தை பெற்றுக்கொண்டு மறுபிரவேசம் செய்த செரீனாவிடம் ஆக்ரோஷம் இருக்கிறதே தவிர, அதை வெற்றியாக மாற்றக்கூடிய சாமர்த்தியம் இப்போது குறைந்து விட்டது. 4 முறை கிராண்ட்ஸ்லாம் இறுதி ஆட்டத்தில் தோற்று இருக்கிறார். முன்னணி நட்சத்திரங்கள் விலகியுள்ள நிலையில் செரீனா அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். செரீனா முதல் சுற்றில் சக நாட்டவர் கிறிஸ்டி அன்னை சந்திக்கிறார்.