தமிழகம் முதலிடம் பெறுவதற்கு கடுமையாக உழைத்த ஈபிஎஸ் ஓபிஎஸ்க்கு வாசன் பாராட்டு!
மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் பட்டியலில் நாட்டிலேயே நிர்வாகத்திறனில் தமிழகம் 5.62 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது மகிழ்ச்சிக்குரியது, பாராட்டுக்குரியது.
முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா ஆசியோடு நடைபெறுகின்ற அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்திற்கு பேரும், புகழும் கிடைக்கின்ற வகையில் நிர்வாகத் திறனில் முதல் இடம் பெற்றிருக்கிறது. தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மேற்கொண்ட கடின உழைப்பிற்கும், உயர் பணிக்கும் கிடைத்திருக்கின்ற அங்கீகாரமாக இதை நான் கருதுகிறேன்.
குறிப்பாக பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் அடிப்படையில் நிர்வாகத்தில் தமிழகம் முதலிடம் பெற்றிருப்பது பெருமையாக இருக்கிறது. அதாவது சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளிலும், சட்டம் ஒழுங்கிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இப்படி தமிழகம் நிர்வாகத்தில் முதலிடம் பெறுவதற்கு பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்ததற்கு காரணமாக இருந்த அந்தந்த துறையின் அமைச்சர், உயர் அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோரது பணிகளும் பாராட்டுக்குரியது.
தமிழகம் நிர்வாகத் திறனில் சிறந்து விளங்குவதால் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள், வளர்ச்சிப் பணிகள், பாதுகாப்பு போன்றவை பூர்த்தி செய்யப்பட்டு, மக்கள் நலன் காக்கப்பட்டு, மாநிலமும் வளம் பெறுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இருவரையும் பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.