நள்ளிரவில் கோயிலில் புகுந்த திருடனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! வேலூர் அருகே நடந்த பரபரப்பு சம்பவம்.!!
நள்ளிரவில் கோயிலில் புகுந்து சாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள சேங்குன்றம் கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஐம்பொன் மற்றும் கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட சாமி சிலைகளிக்கு பூஜை வழிபாடுகள் அப்பகுதி மக்களால் செய்யப்பட்டு வருகிறது.
இந்த கோயில் திருவிழா கடந்த வாரம் சிறப்பாக நடைபெற்ற நிலையில், நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் கோயிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்துள்ளனர். அதில் பணம் இல்லாத காரணத்தால் ஏமாற்றத்தில் ஆத்திரமடைந்து மூலவர் மற்றும் உற்சவர் சிலையை கீழே தள்ளி சேதப்படுத்தியுள்ளனர். அருகிலிருந்த சூலத்தை பிடுங்கி எறிந்ததோடு சாமி சிலைகளை கீழே தள்ளி சூரையாடிவிட்டு தப்பித்துள்ளனர்.
இந்நிலையில் காலைப் பொழுது விடிந்தவுடன் கோயிலைப் பார்த்த அப்பகுதி மக்கள் பெருத்த அதிர்ச்சியுடன் குடியாத்தம் போலீசாருக்கு இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் சாமி சிலைகளை திட்டமிட்டு சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திடீரென கோயில் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை உண்டாக்கியுள்ளது.