உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவையே உலுக்கி எடுத்தது. திரையுலகினர், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எம்.பி. வசந்தகுமார் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பிரபலங்கள் மறைந்தது அதிர்ச்சியின் உச்சம்.
இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அச்சத்தை உருவாக்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் புதிதாக 2 ஆயிரத்து 194 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 79 ஆயிரத்து 473 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், 1,270 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
அரசியல் களத்தில் புகுந்து விளையாடும் கொரோனா திரையுலகினரையும் விட்டு வைக்கவில்லை. நடிகர் சூர்யா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமடைந்துள்ளார். தற்போது அவர் இயல்பாக படப்பிடிப்பில் பங்கேற்றுவருகிறார். இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமீர்கான், மாதவன், கார்த்திக் ஆர்யன் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். கிரிக்கெட் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அடுத்ததாக தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களுக்கு கொத்து கொத்தாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. எனவே தனியார் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் படி விஜய் தொலைக்காட்சி தன்னுடைய ஊழியர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அனைவருக்கும் இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி, காற்றின் மொழி உள்ளிட்ட பல சீரியல் நடிகர், நடிகைகளுக்கும் கொரோனா பரிசோதனையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறபப்டுகிறது. ஏற்கனவே கொரோனா லாக்டவுனால் பல மாதங்களாக வேலை இல்லாமல் இருந்த சின்னத்திரை கலைஞர்கள் இப்போது தான் சீரியல்களில் நடிக்கத்தொடங்கினர். இந்நிலையில் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதால், ஒருவேலை தொற்று உறுதி செய்யப்பட்டால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவோம் என்ற அச்சம் நிலவிவருகிறது.