“அப்பா இந்தாப்பா” தந்தைக்கு தலைக்கவசத்தை கொண்டு வரும் மழலையின் வைரல் வீடியோ..!!
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி குமரேசன் என்பவர் தனது பணிக்காக வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது, அவரது குழந்தை வீட்டில் இருந்து தலைக்கவசத்தை ‘அப்பா இந்தாப்பா’ என்று கூறிக்கொண்டு வெளியே கொண்டு வரும் காணொளி அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைக்கிறது. அப்பாவும் மகளுக்காக சல்யூட் அடித்து மரியாதை செலுத்தும் காட்சி பார்ப்பவர்களை பரவசமூட்டுகிறது.
தலைக்கவசத்தை அணியாமல் வண்டி ஓட்டுவதை கெத்தாக நினைக்கிறார்கள் நம் இளைஞர்கள், தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுக்கவே இதே மனநிலைதான். இதன் பின் இருக்கும் மோசமான விளைவுகளை அறிந்தும் ஹெல்மெட்டை பலர் அணிவதில்லை. செத்தால் நான்தானே சாகப் போகிறேன் போலீசுக்கு என்ன கவலை, என்பதுபோல் சிலர் பேசுகிறார்கள். நாம் வாழ்வதற்கான முழு உரிமை நமக்கு இருந்தாலும், இறப்பைத் தேடிக்கொள்ள நமக்குத் துளி கூட உரிமை இல்லை என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.
ஹெல்மெட் அணியாமல் செல்வதற்கு பொதுவாக கூறும் காரணங்கள்: தலைமுடி கொட்டிவிடும், வியர்வை கொட்டும், காது வலி ஏற்படும் மற்றும் பக்கவாட்டில் வரும் வண்டி தெரியாமல் போய்விடும் என்கிற சப்பைகட்டு கட்டுகிறார்கள். வியர்வையால் தலை முடி கொட்டுகிறது என்பவர்கள் ஏர் வென்டிலேட்டர் உள்ள தலைக்கவசங்களை வாங்கலாம்.
தலைக்கவசம் 1914-ம் ஆண்டு இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பைக் ரேஸ் நடைபெறும்போது தலையில் அடிபட்டு ஏகப்பட்ட வீரர்கள் மரணிக்க நேர்ந்தது, இன்னும் சிலர் தலையில் அடிபட்டு கோமாவுக்குச் சென்றனர். இதைத் தவிர்க்க வேண்டுமென நினைத்த டாக்டர் எரிக் கார்ட்னர் என்பவர் மோஸ் என்ற டிசைனரின் உதவியோடு தலைக்கவசங்களை உருவாக்கினார். முதலில் இதை அணிய மறுத்த வீரர்கள் பின்னர் இதன் மகத்துவம் உணர்ந்து அணியத் தொடங்கினர்.
காவல்துறையை குற்றம் சொல்லாமல் நம் உயிரையும், நம் குடும்பத்தின் எதிர்காலம் குறித்தும் மனதில் வைத்து ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பான பயணத்தை தொடர்வோம். தலைக்கவசம் நம் உயிர்கவசம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்