டெல்லி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு சென்னை அணியை அழைத்து சென்ற கேப்டன் தோனியை, விராட் கோலி பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் நடப்பாண்டு கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தத் தொடரின் முதலாவது தகுதி சுற்று போட்டியில் டெல்லி கேப்பிடல் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
நேற்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை தோனி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 60 ரன்களும், ரிஷப் பந்த் 51 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியில் ஹேசில்வுட் 2 விக்கெட்டையும், ஜடேஜா, பிராவோ, மொயீன் அலி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவர் முடிவில் 173 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது சென்னை அணி. சென்னை அணியில் அதிகபட்சமாக உத்தப்பா 63 ரன்களும், ருதுராஜ் 70 ரன்களும் எடுத்தனர்.
இதில் சென்னை அணியின் வெற்றிக்கு 16 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய தோனி 1 சிக்சர், 3 பவுண்டரி உட்பட 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதனை அடுத்து கேப்டன் தோனிக்கு சமூக வலைதளங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஒன்பதாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய கேப்டன் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கிங்ஸ் பேக் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் போட்டியை தோணி முடித்ததை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
கிரிக்கெட்டில் தோனி தலைசிறந்த பினிஷர் எனவும், மீண்டும் ஒரு முறை தன்னை துள்ளிக் குதிக்க செய்ததாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Anddddd the king is back ❤️the greatest finisher ever in the game. Made me jump Outta my seat once again tonight.@msdhoni
— Virat Kohli (@imVkohli) October 10, 2021