அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் முயற்சியால் இஸ்ரேல்-அரபு அமீரகம் இடையே கடந்த 14 ஆம் தேதி அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. மேலும், இஸ்ரேலை தனி நாடகவும் ஏற்றுக்கொண்டது. ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட நாடு என்ற பட்டியலில் அமீரகம் இணைந்துள்ளது. வளைகுடா நாடுகளில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் நாடு அமீரகம் தான். இந்த ஒப்பந்தம் மூலம் பல ஆண்டுகளாக நீடித்து வந்த பகைமை சற்று தணிந்துள்ளது. மேலும்,ராஜாங்க, தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக இஸ்ரேலை புறக்கணிக்கும் வகையில் இயற்றப்பட்டிருந்த சட்டத்தை அரபு அமீரகம் நேற்று ரத்து செய்தது. இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தலாம்.
இந்நிலையில், இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரக உறவு தொடர்பான வரலாற்றில் முதல் முறையாக இரு நாடுகளுக்கு இடையேயும் விமான போக்குவரத்து இன்று தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலில் இருந்து பிரதமர் பெஞ்சமின் அரசின் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான எல் அல் விமானத்தில் இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானம் சவுதி அரேபியாவில் வான்பரப்பு வழியாக ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வு நடைபெறும் பட்சத்தில் சவுதி அரேபியா வான்பரப்பு வழியாக பறக்க இஸ்ரேல் விமானத்திற்கு அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.