என்னது இது கொரோனாவின் உருமாற்றம் கிடையாதா? என்ன சொல்கிறது ஆய்வு முடிவு?
சீனாவில் உள்ள உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பின் இத்தாலி, அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து என ஒவ்வொரு நாடாக பரவிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது.
கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறி கொண்டே வருகிறது. இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டன. இதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இது வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றாலும் டெல்டாவை விட குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சீனாவின் வூகான் ஆய்வக விஞ்ஞானிகள் கொரோனா குடும்பத்தை சேர்ந்த ‘நியோகோவ்’ என்ற புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் ‘நியோகோவ்’ வைரஸ் தொடர்பான ஆய்வு அறிக்கையை சீன விஞ்ஞானிகள் உலக சுகாதார அமைப்பிடம் வழங்கி உள்ளனர்.
அதில், தென் ஆப்பிரிக்காவில் வாழும் வௌவாலிடம் ‘நியோகோவ்’ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ‘நியோகோவ்’ வைரஸ் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பில்லை என்றும் எனவே அது பற்றி பயப்பட வேண்டாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
பொதுவாக விலங்குகளிடையே பரவும் ஒரு வைரஸ் மனிதர்களுக்கும் பரவ வேண்டுமென்றால் அதற்கு அந்த வைரஸ் உருமாற்றம் அடைய வேண்டும். மனிதர்களிடம் பரவுவதற்கு ஏற்ற குணங்களை உள்ளடக்கிய உருமாற்றம் அடைந்த வைரஸ்கள்தான் மனிதர்களிடையே பரவும் திறனை கொண்டிருக்கும்.
வௌவாலிடம் உள்ள சார்ஸ் கோவிட் குடும்ப வைரஸ்கள் உருமாற்றம் அடைந்து மனிதர்களுக்கு பரவியது. தற்போது சார்ஸ் கோவிட் வைரஸ் குடும்பத்தில் இருந்து ‘நியோகோவ்’ வைரஸ் வந்திருக்கிறது. இது கொரோனா வைரசின் உருமாற்றம் கிடையாது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
தற்போது இந்த புதிய வைரஸ் மனிதர்களிடையே தீவிரமாக பரவும் தன்மை கொண்டதாக இல்லை. எனவே தற்போதைய சூழ்நிலையில் ‘நியோகோவ்’ வைரஸ் பற்றி பயப்பட தேவையில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.