தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இந்த முறை தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக என 5 கட்சிகள் முதல்வர் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்களின் மனநிலையை கணிக்கும் விதமாக கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகிறது.
தற்போது டைம்ஸ் நவ் – சி வோட்டர் இணைந்து தமிழகத்தில் மார்ச் 17 முதல் 22ம் தேதி வரை நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி திமுக கூட்டணிக்கு 46 சதவீத வாக்குகளும், அதிமுக கூட்டணிக்கு 34.6 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் – 4.4%, அமமுக – 3.6%, பிற கட்சிகள் 11.4% வாக்குகளை பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 177 இடங்களிலும், அதிமுக தலைமையிலான கூட்டணி 49 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் – 3, அமமுக – 3, பிற கட்சிகள் 2 இடங்களில் வெற்றி பெற வாய்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சராக வர மிகவும் பொருத்தமான வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு 29.7 சதவீதம் மக்கள் எடப்பாடி பழனிசாமிக்கும், 43.1 சதவீதம் மக்கள் மு.க.ஸ்டாலினுக்கும், 8.4 சதவீதம் பேர் விகே சசிகலாவிற்கும் வாக்களித்துள்ளனர். பாஜக தலைமையிலான தற்போதைய மத்திய அரசு குறித்து நீங்கள் எவ்வளவு திருப்தி அடைகிறீர்கள்? என்ற கேள்விக்கு மிகவும் திருப்தி என 13.45 சதவீதமும், ஓரளவிற்கு திருப்தி 27.82 சதவீதமும், திருப்தி இல்லை என 5.38 சதவீதம் பேரும், கருத்துக்கூற விரும்பவில்லை என 8.35 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.