வெள்ள நிவாரணத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்..? எப்பொழுது வழங்கப்படும் என்பது குறித்து விவரம் இதோ..!!
மிக்ஜாம் புயலால் வட தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து இருக்கிறது. இந்த புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரத்தை ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் நிவாரணத் தொகை குறித்து நேற்று மாலை தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில் புயலால் பலத்தசேதத்தை சந்தித்திருக்கும் சென்னையில் உள்ள அனைத்து வட்டங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் திருப்போரூர் வட்டத்தில் மூன்று கிராமங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று கிராமங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய 6 வட்டங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
ரேஷன் கடைகள் மூலமாகவும், மாநகராட்சி அதிகாரிகள் மூலமாகவும் இன்று முதல் டோக்கன் வழங்கப்பட்டு அடுத்த 10 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்பட இருக்கிறது.
சென்னையில் வசிக்கும் நபர்களில் பெரும்பாலானோர் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்களது ரேசன் கார்டில் சொந்த ஊர் முகவரி தான் இருக்கும் என்பதினால் அவர்கள் நிவாரணத் தொகை பெறும் விண்ணப்பத்தில் வங்கி கணக்கு எண், தற்பொழுது வசிக்கும் இடத்தின் முகவரியை பூர்த்தியிட்டு வழங்க வேண்டும். பின்னர் அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னர் நிவாரணத் தொகை உங்கள் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டு விடும்.
மேலும் நிவாரணத் தொகை வழங்க கொடுக்கப்படும் டோக்கனில், நிவாரணத் தொகை பெற எந்த நாட்களில் எந்த நேரத்தில் ரேசன் கடைக்கு வர வேண்டும், எந்த ரேசன் கடைக்கு வர வேண்டும், குடும்ப தலைவி அல்லது குடும்பத் தலைவர் பெயர், ரேசன் கடை பெயர் உள்ளிட்டவைகள் இடம் பெற்றிருக்கும்.