கத்துக்குட்டி அண்ணாமலை எங்களை விமர்சனம் செய்வதா? கண்டிக்கவில்லை எனில் கூட்டணி குறித்து மறுபரிசீலனை முன்னாள் அமைச்சர் காட்டம்!
அண்ணாமலை தொடர்ந்து இப்படியே விமர்சனம் செய்து வந்தால் பிஜேபி உடன் கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை தவறாக அவதூறு பேசிய அண்ணாமலையை அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் பாஜக கூட்டணிக்கே ஆப்பு வைக்கும் விதமாக கூட்டணி குறித்து மறுபரிசீலனை முடிவு எடுப்பது வரை அதிமுகவினர் பேசி இருப்பது பரபரப்பை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தி உள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுக கட்சிக்கும் தற்போது போதாத காலம் போல. அண்ணாமலை பேசுவதும் அதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவிப்பதும் தற்போது தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் அண்ணாமலை ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலால் திளைத்தன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தால் தண்டனைப் பெற்றார். அதனால் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலமாக மாறி விட்டது. தற்போது அது ஊழலில் முதல் இடத்தில இருப்பதை என்னால் கூற முடியும் என பேட்டி அளித்திருந்தார்.
மேலும் அதிமுக உடன் கூட்டணி குறித்த கேள்விக்கு அவர் கூறுகையில் என்னுடைய கட்சியை வலுப்படுத்த வேண்டும். இதற்காக குரல் கொடுத்து என்னுடைய தொண்டர்களை உற்சாகப்படுத்தி அவர்களுக்கு தொலைநோக்கு பார்வையை காட்ட வேண்டும். ஒரு அரசியல் கட்சியின் இருப்பு என்பது ஆட்சிக்கு வருவது தானே தவிர எப்போதும் கூட்டணியில் நீடிப்பது இல்லை எனக் கூறியிருந்தார்.
அண்ணாமலையின் இந்த பேட்டி அதிமுக தலைவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் அண்ணாமலை தன்னை முன்னிலை படுத்தும் விதமாக கூட்டணி தர்மத்தை மீறி செயல்பட்டு வருகிறார். ஜெயலலிதா பற்றி விமர்சனம் செய்து இருப்பதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் கூட்டணி பற்றி முடிவு செய்ய வேண்டியது அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் மட்டுமே!
அதிமுகவை விமர்சிக்கும் வகையில் அண்ணாமலையின் போக்கு தொடர்ந்தால் கூட்டணி குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். எனவே பாஜகவினர் முற்று புள்ளி வைக்க வேண்டியது அவசியம். அண்ணாமலையை வாயை அடக்கி விட்டு கூட்டணி தர்மத்தை கடை பிடித்தால் நல்லது.
கத்துக்குட்டி அண்ணாமலையின் செயல்பாடுகளை கண்டித்து கூட்டணி தருமத்தை கடைபிடிப்பது பாஜகவினருக்கு நல்லது. அதேபோல எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னிர்செல்வம் ஆகியோரும் அண்ணாமலையின் இந்த போக்கை கடுமையாக சாடியுள்ளனர். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் கூட்டணி கட்சிகள் மோதி கொள்வது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.