உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி 2023! வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!
நடைபெற்று வரும் 4வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா வெற்றியுடன் இந்த ஆண்டை தொடங்கியுள்ளது.
4வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நேற்று அதாவது ஜூன் 13ம் தேதி தொடங்கியது. 17ம் தேதி வரை நடைபெறும் உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடரிகள் பங்கேற்கும் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் பிரிவில் அதாவது ஏ பிரிவில் எகிப்து, கொலம்பியா, ஆஸ்திரேலியா, மலேசியா ஆகிய அணிகள் உள்ளது. பி பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஹாங்காங், ஜப்பான் ஆகிய நான்கு அணிகள் உள்ளது.
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும். லீக் சுற்றுகளின் முடிவில் ஏ மற்றும் பி பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும்.
தொடக்க நாளான நேற்று(ஜூன்13) நடந்த முதல் லீக் ஆட்டத்தில் பி பிரிவில் ஜப்பான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் ஜப்பான் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 4வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
மற்றொரு லீக் ஆட்டத்தில் தரநிலையில் முதலிடத்தில் இருக்கும் பலம் வாய்ந்த எகிப்து அணி 4-0 என்ற புள்ளிக் கணக்கில் ஆஸ்திரேலியா அணியை தோற்கடித்தது. மற்றொரு லீக் ஆட்டத்தில் மலேசியா 3-1 என்ற புள்ளிக் கணக்கில் கொலம்பியாவை தோற்கடித்தது.
இரவில் நடந்த லீக் சுற்றில் இந்திய அணி 4-0 என்ற புள்ளி கணக்கில் ஹாங்காங் அணியை தோற்கடித்து இந்த ஆண்டுக்கான உலகக் கோப்பை ஸ்குவாஸ் தொடரை இந்திய அணியும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இந்த லீக் சுற்றில் இந்திய வீரர் அபய் சிங் 7-2, 7-3, 7-6 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீரர் சுங் யாத் லாங்க் அவர்களையும், இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா 7-1, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் ஹாங்காங் அணியை சேர்ந்த ஹெய்லி பங்கையும், இந்திய வீரர் சவுரவ் கோஷல் அவர்கள் 5-7, 7-2, 7-5, 7-1 என்ற செட் கணக்கில் ஹாங்காங் அணியை சேர்ந்த டோ யு லிங்கையும், இந்திய வீராங்கனை தன்வி கண்ணா 5-7, 6-7, 7-1, 7-4, 7-3 என்ற செட் கணக்கில் ஹாங்காங் அணியை சேர்ந்த சீ யி லாம் டோபியையும் தோற்கடித்தனர்.