ஜூன் அல்லது ஜூலையில் உலக முத்தமிழ் முருகன் மாநாடு! அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படும் என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சந்தித்து பேசினார். அப்பொழுது இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு அவர்கள் “இதுவரையில் எங்கும் நடந்திராத வகையில் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் யாரும் நடத்திராத வகையில் வரலாற்று நிகழ்வு ஒன்றை பழனியில் நடந்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதாவது பழனியில் உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது. அதுவும் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகனை உலகம் முழுவதும் வழிபடும் முருக பக்தர்களையும் உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களை பராமரிக்கும் முருக பக்தர்களையும் தமிழகத்திற்கு அழைத்து இரண்டு நாட்கள் பழனியில் உலக முருக பக்தர்கள் மாநாட்டை நடத்திட உயர்மட்ட குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த உலக முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்துவதற்கான அனைத்து பணிகளும் தற்பொழுது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. இதை பெரு மகிழ்ச்சியோடு அறிவித்துக் கொள்கின்றேன். கிராம தெய்வங்களான குல தெய்வங்களின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் வரலாறு புத்தகம் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வரலாறு புத்தகத்திற்கு என்று தனியாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.