இளைஞர் வெட்டிக்கொலை!! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் காரணம்!! 

Photo of author

By Amutha

இளைஞர் வெட்டிக்கொலை!! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் காரணம்!! 

நெல்லை மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள  திசையன்விளையை அடுத்த அப்புவிளை சுவாமிதாஸ் நகரை சேர்ந்தவர் கன்னியப்பன். தொழிலாளி. இவரது மகன் முத்தையா வயது 19. இவர் திசையன்விளை அருகே சங்கனாங்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில்  நேற்று இரவு தனது நண்பர்களை சந்தித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு புறப்பட்டு சென்றுள்ளார். 

ஆனால் வெளியே சென்ற முத்தையா நள்ளிரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த    அவரின் பெற்றோர் அந்தப் பகுதி மற்றும் உறவினர் வீடுகளில் தேடிச் சென்றனர். அப்போது சுவாமிதாஸ் நகரில் உள்ள காட்டு பகுதியில் அவரது மோட்டார் சைக்கிள் கிடந்தது. உடனே உறவினர்கள் அந்த பகுதியில் தேடி பார்த்தனர். அப்போது கழுத்து, முதுகு, வயிறு உள்ளிட்ட பாகங்களில் பலத்த வெட்டுக்காயங்களுடன் முத்தையா ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து  திசையன்விளை போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்படவே இன்ஸ்பெக்டர் ராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட முத்தையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை நடந்த இடத்தை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்த போலீசார் கொலைக்கான காரணத்தை துருவி விசாரணை செய்து வருகின்றனர். அதில் முத்தையா மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்  ஒருவரை காதலித்து வந்ததாகவும் அவருடன் ஊர் சுற்றியதாகவும், இதை அறிந்த பெண்ணின் பெற்றோர் இதனைகண்டித்து  வந்துள்ளதாக தெரிய வந்தது.

இதன் காரணமாக அந்தப் பெண்ணின் பெற்றோர் அல்லது உறவினர்கள் யாரேனும் இந்த கொலையை செய்துள்ளனரா?? அல்லது வேறு ஏதேனும் முன்பகை காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் பிரச்சனை ஏதும் ஏற்படாமல் இருக்க திசையன்விளை போலீசார் முழுமையான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.