தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்களை அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு பயிற்சிக்கு அனுப்ப அனுமதி வழங்க 10 ஆயிரம் லஞ்சம்!
வேலூர் மாநகருக்குட்பட்ட சார்பனா மேடு பகுதியில் செயல்பட்டு வருகிறது (BPR) தனியார் நர்சிங் கல்லூரி. இக்கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் ஆண்டு முடிவில் மூன்று மாத காலம் பயிற்சிக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்ப கல்லூரி தரப்பில் இருந்து விண்ணப்பித்திருந்த நிலையில் அதனை ஆய்வு செய்த வேலூர் வட்டார சுகாதார கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி (57) இதற்கு அனுமதி வழங்க லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தனியார் நர்சிங் கல்லூரியின் முதல்வர் சரண்யா வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இன்று லஞ்சப்பணம் பெறுவதற்காக தனியார் கல்லூரிக்கு வந்த வட்டார சுகாதார கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி (57) கல்லூரி முதல்வர் சரண்யாவிடமிருந்து 10 ஆயிரத்தை லஞ்சமாக பெற்றுள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் கிருஷ்ணமூர்த்தியை கையும் களவுமாக கைது செய்தும் பத்தாயிரம் லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.