நீட் தேர்வு மரணங்களுக்கு ஒன்றிய அரசும், ஆளுநர் தான் காரணம் : கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!
“நீட் தேர்வால் ஏற்படும் மரணங்களுக்கு ஒன்றிய அரசும், ஆளுநர் ரவியும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த திரு. செல்வசேகர் என்பவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (19), நீட் தேர்வு தோல்வியால், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது மகன் இறந்த துக்கம் தாளாமல் அவரது தந்தை திரு. செல்வசேகரும் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நீட் விலக்கு குறித்து விரைவில் மத்திய அரசு பரிசீலனை செய்ய
வேண்டும் எனவும்,
நீட் தேர்வு விலக்கு தொடர்பான ஆவணங்களில் ஆளுநர் ரவி அவர்கள் கையொப்பமிட வேண்டும் என்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்கொலை செய்துக் கொண்ட செல்வசேகர் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீட் தேர்வால் ஏற்படும் மரணங்களுக்கு ஒன்றிய அரசும், ஆளுநர் ரவியும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்கள் நீட் தேர்வு குறித்து பல்வேறு போராட்டங்களை தமிழகத்தில் முன்னெடுத்து வருகின்றனர். அதேசமயத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் சங்கத்தினர் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையியிட்டது குறிப்பிடத்தக்கது.