நாற்பதும் நமக்கே! மோடியா எடப்பாடியா? ஜெயலலிதா பாணிக்கு திரும்பும் அதிமுக

0
160
Modi vs Edappadi Palanisamy ADMK target for 40
Modi vs Edappadi Palanisamy ADMK target for 40

நாற்பதும் நமக்கே! மோடியா எடப்பாடியா? ஜெயலலிதா பாணிக்கு திரும்பும் அதிமுக

அதிமுக மற்றும் பாஜக இடையே பல நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த கூட்டணி பிரச்சனை தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகுவதாக அக்கட்சியின் தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்த உடனே இரு கட்சி தொண்டர்களும் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த நிகழ்வுகள் இதுவரை அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணியாகவும் தொண்டர்கள் விரும்பாத கூட்டணியாகவும் இருந்ததை தான் உணர்த்துகிறது.

அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு காரணமாக அண்ணாமலையின் அறிஞர் அண்ணா அவர்களுக்கு எதிரான பேச்சு தற்போது காரணமாக கூறப்பட்டாலும் இதற்கு முன்பே பல்வேறு விவகாரங்களில் இரு கட்சிகளும் முரண்பாடுகளுடன் தான் கூட்டணியை தொடர்ந்து வந்தது. எதிர்த்தரப்பில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுக்குள் சிறு சிறு முரண்பாடுகள் இருந்தாலும் பொது வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாமல் கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

ஆனால் பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு அக்கட்சியை வளர்க்கும் வகையில் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதே நேரத்தில் அடிக்கடி திராவிட கட்சிகள் என குறிப்பிட்டு பேசுவதன் மூலமாக தங்களுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுகவையும் சேர்த்து விமர்சித்து வந்தார். ஒரு கட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்த விமர்சிக்கும் போது தான் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் சுதாரித்துக் கொண்டு எதிர்வினையாற்றினர். அப்போதிலிருந்து இரு தரப்பின் தலைவர்களும் முரண்பாடுகளுடனே செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட நடைப் பயணத்தின் போது அண்ணா அவர்களை கடுமையாக விமர்சித்து பேசியது அக்கட்சியின் தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது குறித்து முதல் எதிர்ப்பானது முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் மூலமாக கிளம்பியது. இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக பாஜக கூட்டணியில் இல்லை என்று அடுத்த ஷாக்கை கொடுத்தார்.

இதனைத்தொடர்ந்து அண்ணாமலையின் விமர்சனம் குறித்து பாஜக மேலிடத்திடம் அதிமுக தலைமை பேசியும் தீர்வு ஏற்படாததால் இறுதியில் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தது. இதைக் இரு கட்சி தலைவர்களும் வரவேற்பது போன்ற தோற்றத்தை கொடுத்தாலும், இதனால் உடனடி பலன் அதிமுகவுக்கும் கிடைக்குமோ இல்லையோ திமுகவின் எதிர்ப்பு பிரிவதால் அக்கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் அதிமுக பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறது என்ற விமர்சனத்துக்கு முற்றுப் புள்ளி வைத்ததாகவே பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக அதிமுக மேலும் வலுவான கட்டமைப்பை உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது பாஜகவின் அரசியல் அழுத்தத்தை கண்டு கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி எடுத்த தீர்க்கமான முடிவை போலவே வரவுள்ள மக்களவை தேர்தலிலும் எடுக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் வரவுள்ள மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அறிவித்துள்ளது கட்சி தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்த பாமக அதிலிருந்து விலகியதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது பாஜகவும் கூட்டணியில் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.அந்த வகையில் பாமக மற்றும் பாஜக இல்லாமல் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்ற கேள்வியும் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

அதே நேரத்தில் தமிழக அரசியலில் அவ்வப்போது எடப்பாடி பழனிசாமி எடுக்கும் சில அதிரடி முடிவுகளை போல தற்போதும் எடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது எதிர்பார்த்த கூட்டணி அமையவில்லை என்றாலும் வரவுள்ள மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து களம் காணவும் தயாராகி விட்டது போன்ற தோற்றத்தையே சமீபத்திய முடிவுகள் உணர்த்துகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் கூட்டணி எதையும் நம்பாமல் தொண்டர்களை மட்டுமே நம்பி மோடியா லேடியா? என்ற முழக்கத்துடன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனித்து களமிறங்கினர். எதிர்பார்த்தது போலவே மெகா வெற்றியையும் பெற்றார். அதே போலவே மோடியா எடப்பாடியா? என்ற முழக்கத்துடன் வரவுள்ள மக்களவை தேர்தலை அதிமுக எதிர்கொள்ள தயாராகி வருவதாகவே காட்சிகள் உணர்த்துகின்றன.

ஏற்கனவே கொங்கு மற்றும் வட மாவட்டங்களில் வலிமையாக உள்ள அதிமுக சமீபத்தில் மதுரையில் நடத்திய மாநாட்டில் தங்களுடைய செல்வாக்கை மீண்டும் நிரூபித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழக மக்கள் விரும்பும் வகையில் தேசிய கட்சிகளை சாராத வலிமையான மாநில கட்சியாக செயல்படும் போது அதிமுகவை ஆதரிக்க வாய்ப்பிருக்கும் என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Previous articleதமிழ் ஹீரோக்களோடு நடித்து ஹிட் கொடுத்த 6 மலையாள ஸ்டார்கள்!!! ஆரம்பமே அதிரடியான கூட்டணி தான்!!!
Next articleசென்னையில் டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போன்ற தீம் பார்க்!!! தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு!!!