ரெட் அலர்ட்.. உருவானது மிக்ஜாம் புயல்!! டிசம்பர் 5 ஆம் தேதி கரையை கடக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தின் வங்கக் கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை கனமழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வந்தது.
இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்பொழுது புயலாக வலுப்பெற்று இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என்று பெயரிடப்பட்டு இருக்கும் நிலையில் அவை தற்பொழுது சென்னையில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மிக்ஜாம் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இன்று முற்பகல் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோர பகுதிகளில் நிலவக்கூடும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. இவை தீவிர புயலாக வலுப்பெற்று நாளை டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகல் ஆந்திராவின் நெல்லுருக்கும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையைக் கடக்கும்.
புதிதாக உருவாகி இருக்கும் மிக்ஜாம் புயலின் தீவிரத்தால் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மழை நீர் தேங்கி இருபதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் புயலின் தீவிரத்தால் சென்னை, கடலூரி, எண்ணூர், காட்டுப்பள்ளி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் 5ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் மிக்ஜாம் புயல் ஆந்திரா அருகே கரையை கடக்க இருப்பதால் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களான கடப்பா, அன்னம்மையா, திருப்பதி, சித்தூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது. அம்மாநில கடலோர மாவட்ட மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.