கருணாநிதி டூ இன்பநிதி! தமிழகத்தை வதைக்கும் வாரிசு அரசியல்!!
திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடும், அசத்தல் பிரியாணியும், வாரிசு அரசியலும் இன்று தமிழகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு கோலாகலமாக நடைபெற்றது.
முதல்வர் ஸ்டாலின் மாநாட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். 1500 பேர் கொண்ட வாகன பேரணி, 1000 ட்ரோன்களைக் கொண்ட ட்ரோன் ஷோ, தாரை தப்பட்டை முதல் அறுசுவை உணவு வரை மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. திமுக இளைஞரணி மாநாட்டுக்காக சேலத்தில் அமைக்கப்பட்ட அரங்கம், உலகின் மிகப்பெரிய ‘தற்காலிக மாநாட்டு அரங்கம்’ என்று Unique World Records புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
மாநாட்டிற்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணை பொது செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் வருகை தந்தனர். தொடர்ந்து திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி திமுக கொடியை ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார்.
பல்லாயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் டிஆர்பாலு, அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இப்பிரம்மாண்ட நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி விழாவிற்கான ஏற்பாடுகளை விசிட் அடித்தது முதல் விழா மேடையில் அமர்ந்தது வரை தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக மீது வாரிசு அரசியல் முத்திரை குத்தப்பட்டு வரும் நிலையில் அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதி சேலம் திமுக மாநாட்டில் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.
முன்னதாகவே உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, அமைச்சர், அடுத்ததாக துணை முதலமைச்சர் என பேசு பொருளாகியுள்ள நிலையில் அடுத்த கட்ட வாரிசாக இன்பநதி ஸ்டாலினும் திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
சர்வதேச அளவில் கால்பந்தாட்ட வீரராக புகழ்பெற்று வரும் இன்பநிதி ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிகழ்ச்சியிலும், கடந்த ஜூலை மாதத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஆசிய ஹாக்கி போட்டி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.
முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்பநிதியின் புகைப்படத்தை வைத்து, அதற்கு கீழே “எதிர்காலமே” என்றும், “இன்பநிதி பாசறை” என்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதன்படி, இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாட்டிலும் மேடையில் அமர்ந்து மீண்டும் வாரிசு அரசியலின் வெளிப்பாட்டை காட்டியுள்ளனர் திமுகவினர். மாநாட்டின் போது திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் இன்பநிதியை ‘சின்ன தளபதி’ என்றும், ‘இளையா’ எனவும் கோஷமிட்டு உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர்.
மேலும் இது குறித்து முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், “சேலத்தில் நடைபெற்ற இளைஞர் அணி மாநாட்டிற்கு இன்பநதி வருகை தந்தது மூலம் திமுகவின் குடும்ப அரசியல் வெளிப்படையாக தெரிகிறது. ஆடம்பர திமுகவிற்கு அழிவு நேரிடும்” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாநாடு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “சேலம் இளைஞர் அணி மாநாட்டில் தங்கை கனிமொழி ஏற்றி வைத்துள்ள நம் கழகக் கொடியும், மாநாட்டு அரங்கில் அதிரும் கொள்கை முழக்கங்களும் நாளைய வெற்றிக்கு நமக்கு ஊக்கமளிக்கட்டும்! புது வரலாறு படைக்கப் புறப்படுவோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவிலும் தனது வாரிசு அரசியலை வெளிக்காட்டும் விதமாக திமுக துணை பொது செயலாளர் கனிமொழியை தங்கை என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்பநிதியையும் அடுத்த அரசியல் வாரிசாக நேரடியாக களம் இறக்குமா திமுக என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!