பழ கரைசல்: உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகள் செழிப்பாக வளர இது ஒன்று போதும்!
உங்களில் பலர் இயற்கை விவசாயம் செய்பவர்களாக இருப்பீர்கள். ஒருசிலர் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் இருப்பீர்கள். இயற்கை விவசாயம் என்றால் அவ்வளவு கடினமான விஷயம் எல்லாம் இல்லை. அதில் ஆர்வம் இருந்தாலே ஜெயித்து விடலாம்.
இன்று நாம் உண்ணும் உணவு பொருட்களில் இரசாயனம் எளிதாக கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. எனவே இதை மனதில் வைத்துக் கொண்டு உங்கள் வீட்டில் சிறு பகுதி இருந்தாலும் அதில் தோட்டம் வைக்க தொடங்குங்கள்.
நீங்கள் வளர்க்கும் செடி, கொடிகள் நன்கு செழிப்பாக எந்த வித பூச்சி தாக்குதலும் இன்றி வளர பழ கரைசல் பயன்படுத்துங்கள்.
இவை நன்கு கனிந்த வாழைப்பழம் மற்றும் நாட்டு சர்க்கரை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலவையாகும்.
ஒரு கிலோ நன்கு கனிந்த வாழை பழம் எடுத்துக் கொள்ளவும். இதை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போடவும். அதன் பின்னர் ஒரு கிலோ நாட்டு சர்க்கரையை அதில் போட்டு நன்கு குலுக்கி விடவும். இதை மூடி போட்டு நிழலான இடத்தில் வைத்து 3 நாட்களுக்கு ஒருமுறை குலுக்கி விடவும்.
40 அல்லது 48 நாட்கள் கழித்து பார்த்தால் பழம் + நாட்டு சர்க்கரை நொதித்து நல்ல வாசனை வரும். இந்த பழ கரைசல் 10 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி அளவு கலந்து செடிகளின் வேர் பகுதியில் ஊற்றி விடவும். இவ்வாறு மாதம் ஒருமுறை பயிர்களுக்கு பயன்படுத்தி வந்தால் செடிகளில் பூச்சி, புழு தாக்குதல் ஏற்படாமல் ஆரோக்கியமாக வளரும்.