கடந்த 2 ஆம் தேதி காணாமல் போன திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜெயக்குமார் தனசிங் நேற்று காலை சடலமாக மீட்டப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஜெயக்குமார் உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் பாதி எறிந்த நிலையில் சடலமாக மீட்டக்கப்பட்டார்.
ஜெயக்குமார் தனசிங்கின் உடல் அவரது தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, கடந்த 30ஆம் தேதி ஜெயக்குமார் தனது கைப்பட எழுதிய கடிதத்தில், திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாகவும், தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், ஜெயக்குமார் எழுதிய மற்றொரு கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் இடம் இருந்து ரூபாய் 78 லட்சம் மற்றும் ரூபி மனோகரன் இடம் கேவி தங்கபாலு வாங்கிக் கொள்ள சொன்ன 11 லட்சம் என மொத்தமாக 89 லட்சம் ரூபாயை வழக்குத் தொடர்ந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று, தன்னுடைய மருமகனுக்கு ஜெயக்குமார் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், யார் யாரிடம் பணம் பெற வேண்டும், யாருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற விவரங்களையும் அந்த கடிதத்தில் தன்னுடைய மகனுக்கு ஜெயக்குமார் முழு விவரத்துடன் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து வெளியான கடிதங்கள் மூலம் ஜெயக்குமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றன. மேலும், ஜெயக்குமார் ஒரு மரப்பலகையில் கட்டப்பட்டு அதன் பின்னர் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளதாக சில தகவல்களும் வெளியாகி உள்ளன.
ஜெயக்குமாரின் மரணத்தின் பின்னணியில் யார் உள்ளார்கள்? என்ற விவரத்தை நிச்சயமாக போலீசார் கண்டுபிடித்து வெளியிட வேண்டும் என்றும், இது போன்ற அரசியல் கொலைகள் இணையும் ஏற்படாமல் தமிழகத்தின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் கோரிக்கையாக முன்வைத்து வருகின்றனர்.