கொரோனாவை வென்ற 97 வயது முதியவர்! ஆச்சரியம் கொடுத்த ஆரோக்கியம்!

0
163

கொரோனா பாதிப்பில் இருந்து 97 வயது முதியவர் குணமடைந்த நிகழ்வு பலரிடையே மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையை அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினசரி கூடி வருவதால் அதனை தடுக்க தமிழக அரசு அடுத்தகட்ட ஊரடங்கு ஆலோசனைக்கு தயாராகி வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா கோரதாண்டவம் ஆடி வருகிறது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 367 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த 97 வயது முதியவர் ஒருவர், கொரோனா தொற்று காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் இருப்பதாக கூறப்பட்டது.

இதையடுத்து தொடர் மருத்துவ சிகிச்சையின் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து படிப்படியாக குணமாகிய முதியவர் கிருஷ்ணமூர்த்தி தற்போது முற்றிலும் நோய் பாதிப்பில்லாத நிலையை அடைந்தது மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மட்டுமல்லாமல் கொரோனாவால் பாதித்த அனைவருக்கும் புதிய நம்பிக்கையை அளித்துள்ளார். சுருக்கமாக சொல்லப்போனால் யுத்தகளத்தில் இருந்து அவர் மீண்டு வந்துள்ளார் என்றே கூறலாம்.

இதுவரை கொரோனாவால் முதியவர்களே அதிகம் பாதிப்படைந்து பலியான நிலையில் இவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பிய நிகழ்வு பொதுமக்களிடையே மகிழ்ச்சியையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

Previous articleஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஜெயலலிதா வழங்கிய சலுகையை மீண்டும் வழங்க கோரிக்கை
Next articleக.அன்பழகன் மகள் உடல்நலக்குறைவால் காலமானார்! திமுகவினர் அஞ்சலி