தற்போது அதிகரிக்கும் கலாச்சார சீர்கேடுகள் வேதனை அளிக்கும் வகையில் உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
உறவில் இருந்த பெண் ஒருவர் அளித்த பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி ஆண் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பிரிட்டிஷார் இந்திய நாட்டை விட்டு வெளியேறி சுதந்திரம் கிடைத்தாலும் அவர்களின் பழக்கவழக்கங்கள் நம் நாட்டை விட்டு வெளியேறவில்லை. அந்நிய நாடுகளின் கலாச்சார மோகமானது தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவர்களின் உணவு பழக்கவழக்கங்கள், ஆடைகள் அணிதல் போன்றவற்றில் ஆரம்பித்து தற்போது அவர்களின் வாழ்க்கை முறையையும் பின்பற்றி வருவது அதிகரித்துள்ளது.
நமது பாரத நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் போன்றவை மெல்ல மெல்ல மறைந்து மேற்கத்திய நாகரிகத்திற்கு மக்கள் முழுவதும் மாறி வருகின்றனர். அவற்றிற்கு எடுத்துக்காட்டுகளில் ஒன்று தான் லிவ்விங் டுகெதர் என்ற திருமணமாகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் கலாச்சாரம்.
இந்த உறவில் இருப்பவர்கள் எதற்கும் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. பிடித்திருந்தால் சேர்ந்து வாழலாம். பிடிக்காவிட்டால் அவரவர் வழியில் போய்க் கொள்ளலாம். சில சமயங்களில் அந்த உறவில் உள்ளவர்களிடையே ஏற்படும் மோதல்களால் உறவுகள் பிரிவதும், சில சமயங்களில் கொலை வரை சென்று முடிந்து விடுகிறது. இந்த உறவில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவே உள்ளனர்.
அதுபோன்ற லிவிங் டுகெதர் உறவிலிருந்து பெண் ஒருவர் அந்த ஆணுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு முடிவுக்கு வந்ததும் அந்த ஆணிற்கு எதிராக பாலியல் பலாத்காரப் புகாரை அந்தப் பெண் அளித்துள்ளார். அவரின் புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு அந்த ஆணின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த எஃப்.ஐ.ஆர் பதிவை ரத்து செய்யுமாறு பாதிக்கப்பட்ட அந்த ஆண் சுப்ரீம் கோர்ட்டின் உதவியை நாடி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா மற்றும் என்.கோடீஸ்வர சிங்க் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அவர்கள் மனுவை விசாரித்து கூறும்போது தற்போது இதுபோன்ற ஏராளமான விவகாரங்களுடன் கூடிய வழக்குகள் பல நீதிமன்றத்திற்கு வந்த வண்ணம் உள்ளன.
அதன்படி நீண்ட காலத்திற்கு கருத்து ஒன்றுபட்டு உறவுகளில் தொடர்ந்து நீடித்து வாழ்பவர்கள் அந்த உறவு கசந்ததும் அதை குற்றச்செயலாக கருதி தற்போது நீதி கேட்கும் புது ட்ரெண்ட் காணப்பட்டு வருகிறது.
எதிர்ப்பு எதுவும் இன்றி இருவருக்கும் இடையே நீண்ட கால உடல் சார்ந்த உறவுகள் இருக்கும் போது அது அடுத்தகட்டமாக திருமணத்திற்கு சென்றால் அல்லது அந்தப் பெண் திருமணம் செய்ய ஆசைப்பட்டு அந்த ஆணை வற்புறுத்தினால் அது கருத்தொருமித்த ஓர் உறவுக்கான அடையாளம். அந்த உறவிற்கு சமுதாயத்தில் மதிப்பு உண்டு.
ஆனால் அதே சமயத்தில் பொய்யான திருமண வாக்குறுதி அளித்து அந்த ஆண் நபர் உறவை ஏற்படுத்தினால் அது உண்மையை தவறாக புரிந்து கொள்ளும் அடிப்படையில் ஆனது என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கருத்தினை தெரிவித்துள்ளனர். இது எப்படியோ தற்போது பரவி வரும் இந்த கலாச்சார சீர்கேடுகள் வேதனை அளிக்கும் வகையில் உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.