முல்லைப் பெரியாறு அணையை கட்டியவரின் கல்லறை சேதம்

Photo of author

By Parthipan K

முல்லைப் பெரியாறு அணையை கட்டியவரின் கல்லறை சேதம்

Parthipan K

தனது சொத்துகள் முழுவதையும் செலவழித்து  மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழக கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் கர்னல் ஜான் பென்னிகுவிக். இதனால் 5 மாவட்ட விவசாயிகள் இவரை கடவுளாக வழிபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் இன்றும் கூட பல வீடுகளில் தங்களது குழந்தைகளுக்கு பென்னிகுவிக் பெயரை வைத்து அழைத்து வருகின்றனர். இவருக்கு தமிழக அரசு சார்பில் தேனி மாவட்டம் கூடலூரில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு ஆள் உயர முழு வெண்கல சிலை வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு லண்டன் செயின்ட் பீட்டர்ஸ் பர்க் தேவாலயத்தில் கல்லறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கல்லறையை லண்டன் வாழ் தமிழ் மக்கள் அடிக்கடி பார்வையிட்டு அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்த கல்லறையின் மீது அமைக்கப்பட்டு இருந்த சிலுவை வடிவிலான பாறை இடித்து அகற்றப்பட்டு இருந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்மந்தப்பட்ட தேவாலயத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை நடத்தி, கல்லறையை சேதப்படுத்தியவர்களை லண்டன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.