அடுத்த தர்மயுத்தம் தயார்! அதிமுகவிற்குள் வெடிக்கவுள்ள பூகம்பம்
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தான் சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலாவின் விடுதலை தமிழக அரசியலை உச்ச கட்ட பரபரப்பிற்கு இழுத்து சென்றது.ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அவரது வருகைக்கு யாரும் முக்கியத்துவம் அளிக்கவில்லை.குறிப்பாக அவரது சென்னை வருகையின் போது மட்டுமே ஊடகங்கள் அனைத்தும் முக்கியத்துவம் கொடுத்தன.அதன் பிறகு சசிகலா இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு சென்று விட்டது.
ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அதிமுக தலைமை தேர்தலை எதிர் கொள்ளும் வகையில் தொடர் பிரச்சாரம்,விருப்ப மனு பெறுதல் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தி வருகின்றது. சசிகலா அடுத்து என்ன செய்ய போகிறார் என அதிமுக எதிர்பார்ப்பதை விட திமுகவினர் பெரிதும் எதிர்பார்க்கின்றனர் என்பதை அவரது வருகையின் போது நடந்த நிகழ்வுகளின் மூலமாக புரிந்து கொள்ளலாம்.
எதையும் கண்டு கொள்ளாமல் எடப்பாடி தரப்பு பிரச்சாரத்தில் கவனம் செலுத்தி வந்தாலும் எந்த நேரத்தில் சசிகலா என்ன செய்ய போகிறார் என்று தெரியாமல் உள்ளுக்குள் குழப்பத்தில் இருப்பதாகவே தகவல்கள் வருகின்றன.அதுவும் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய வழக்கை விசாரிக்க மேல் முறையீடு செய்துள்ளது அதிமுக தலைமையை மேலும் அச்சமூட்டும் வகையிலேயே அமைந்துள்ளது.
இந்நிலையில் தான் வரும் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளன்று சசிகலா தன்னுடைய அதிரடியை காட்ட ஆரம்பிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர்.அவர்களது திட்டப்படி ஜெயலலிதா பிறந்த நாளன்று அவரது நினைவு மண்டபத்தை திறந்தே ஆக வேண்டும்.அந்த சமயத்தில் சசிகலா அங்கு செல்லலாம் என்றும்,ஏற்கனவே தற்போதைய துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் தியானம் செய்து தர்ம யுத்தம் நடத்தியது போல சசிகலாவும் தியானம் செய்து மக்களின் பார்வையை தன் பக்கம் திருப்ப திட்டமிட்டுள்ளதாகவும் பேசி வருகின்றனர்.
மேலும் விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில் எடப்பாடி தரப்பு அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி எதையும் செய்ய முடியாது எனவும், அதிமுகவில் சீட்டு கேட்டு கிடைக்காத நபர்கள் சசிகலா பக்கம் திரும்பவும் வாய்ப்புள்ளதாக பேசி வருகின்றனர்.இதை திட்டமிட்டு தான் சசிகலா தற்போது அமைதியாக இருப்பதாகவும் அவர்கள் பேசிக் கொள்கின்றனர்.
சசிகலாவின் வருகையை தங்களுடைய அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி இது வரை சமாளித்து வந்த அதிமுக தலைமை இனி எவ்வாறு கையாள போகிறது என தினமும் எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே வருகிறது.சசிகலா ஆதரவாளர்கள் கூறுவது போல ஜெயலலிதா பிறந்த நாளன்று அவர் அதிரடி காட்டுவாரா அல்லது புஷ் வானம் போல இருக்குமிடம் தெரியாமல் போவாரா? என சில தினங்களில் தெரிந்து விடும் என அதிமுக தொண்டர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.