வெள்ளத்தால் தத்தளித்து வரும் சென்னையில், நிலைமை ஒரு வாரத்திற்குள் சீராக வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.
சென்னை பகுதியானது இப்போது ரெட் அலெர்ட்க்கு வந்தஉடனையே திமுக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த நிலை வந்திருக்காது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வளிமண்டல சுழற்சி காரணமாக வடதமிழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால், வீடு மற்றும் உடமைகளை இழந்து, பொதுமக்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் தத்தளிக்கின்றனர்.
குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு தவிக்கின்றனர்.இந்த நிலைக்கு அரசின் அலச்சியமே காரணம் என மக்கள் கூறுகின்றனர்.
மேலும், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசு கட்டிடங்களும் வெள்ளத்தில் தத்தளிப்பதால், அரசுப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், மிகவும் தாழ்வான பகுதிகளில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை மீண்டும் மழை வெள்ளத்தில் மிதந்து வருவது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளை கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
சாலை விரிவாக்கம் செய்வது தொடர்பான வழக்கின் விசாரணையின் போது, மழை, வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்பட்டிருப்பதற்கு கவலை தெரிவித்தனர். மேலும், கடந்த 2015ம் ஆண்டுக்கு பிறகு என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்றும், மழை வெள்ளம் பாய்ந்தோடும் விதமாக பாதாள சாக்கடைகளை முறையாக அமைக்காதது ஏன்..? என்றும் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, சென்னை பெருநகரில் ஒருவாரத்திற்குள் நிலைமை சீராகும் என்று நம்புவதாகவும், அப்படியில்லையெனில் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யும் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.