அம்பாசமுத்திரம் பல்பிடுங்கபட்ட விவகாரத்தில் ஏ.எஸ்.பி உட்பட 5 போலீசார் மீது வழக்குபதிவு!

0
296
#image_title

அம்பாசமுத்திரம் பல்பிடுங்கபட்ட விவகாரத்தின் விசாரணை விரிவடைந்து வருகிறது ஏ.எஸ்.பி உட்பட 5 போலீசார் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் மருத்துவ குழு மூலம் மருத்துவ பரிசோதனை செய்யவும் சிபி சி ஐ டி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், விகே புரம் காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாகவும் அவர்களை கொடூரமாக தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.சுபாஷ் , அருண்குமார் வேதநாரயணன் உள்ளிட்டோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏ.எஸ்.பி பல்வீர் சிங் உட்பட 5 போலீஸார் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி வி கே புரம் காவல் நிலையங்களில் தடையவியல் நிபுணர்களுடன் சென்று காவல் நிலையங்களில் உள்ள தடயங்கள் சேகரிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவான ஹார்ட் டிஸ்க்கள் உள்ளிட்டவைகளையும் சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளிலும் தனி தனி விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தனித்தனியாக மூன்று அதிகாரிகளும் மூன்று காவல் நிலையங்களில் பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தி வருகின்றனர். காவல் நிலையங்கள் அமைந்திருக்கும் இடம் காவல் நிலைய வளாகம் மற்றும் காவல் நிலையங்களில் உள்ள ஒவ்வொரு அறை உள்ளிட்டவைகளையும் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தி விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அவர்கள் ஆஜராகும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவ குழு மூலம் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அருண்குமார் மற்றும் 17 வயது சிறார்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஏ டி எஸ் பி சங்கர் தலைமையில் விசாரணைக்கு ஆஜராகும் படி அழைப்பானது அருண்குமார் தரப்புக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் ஏ எஸ் பி மீதான வழக்கு விசாரணையை ஒரு டிஎஸ்பி செய்தால் சரியானதாக இருக்காது.

ஐஜி தலைமையில் மேற்பார்வை அதிகாரி நியமிக்க வேண்டும் பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசாரணை அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமான மனுவை தாக்கல் செய்துவிட்டு வெளியேறினர். நம்பகத்தன்மை வந்தால் மட்டுமே மீண்டும் ஆஜராக போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ள நிலையில் விசாரணையில் தொய்வு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

Previous articleதேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதி விபத்து!
Next articleபயங்கரவாதத்தின் கொடூர யதார்த்தத்தை அம்பலப்படுத்தும் ‘தி கேரளா ஸ்டோரி’!! மத்திய பிரதேசத்தில் வரிவிலக்கு!