தவறான சிகிச்சையின் காரணமாக கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு!
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ஊழியர்களின் தவறான சிகிச்சையால் வலது கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தஸ்தகீர்-அஜீஷா தம்பதிக்கு முகமது மகிர் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது.இந்நிலையில் குழந்தை 32 வாரத்திலேயே பிறந்ததால் உடலில் பல்வேறு பிரச்சனைகளுடன் அவதிப்பட்டு வந்துள்ளது.மேலும் மூளைக்கு அருகேயுள்ள வென்ட்ரிகுலா் அறையில் திரவம் கோர்த்திருந்ததால் அதனை சரிசெய்ய ஷண்ட் என்ற உபகரணம் பொருத்தப்பட்டிருந்தது.இந்நிலையில் அந்த உபகரணம் அதன் நிலையில் இருந்து மாறியதால் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பரிசோதனையில் குழந்தைக்கு ஊட்டச்சத்து,வளா்ச்சி குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்ததால் சிகிச்சைக்காக கையில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு ஷண்ட் உபகாரணத்தின் நிலையை மாற்றி வைத்தனர்.
இதையடுத்து தொடர் சிகிச்சைக்கு பின்னர் குழந்தையை பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.இந்நிலையில் குழந்தையின் உடலில் மாற்றம் ஏற்பட்டு வலது கையின் நிறம் மாற தொடங்கியது.இதனால் பதறிய குழந்தையின் பெற்றோர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.மேலும் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் வலது கை அழுகி விட்டதென்றும் அதனை உடனே அகற்ற வேண்டும் இல்லையென்றால் குழந்தையின் உயிர்க்கு ஆபத்து நேர்ந்துவிடும் என்றும் கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையின் உயிரை காப்பாற்ற கைகளை எடுக்க சம்மதித்தனர்.இதையடுத்து குழந்தையின் வலது கை மூட்டு பகுதிக்குமேல் அகற்ற பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் குழந்தையின் உடலில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாமல் சிகிச்சை பலனின்றி குழந்தை முகமது மகிர் உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் அலட்சியத்தால் தன்னுடைய குழந்தை உயிரிழந்து விட்டதென்று கூறி கதறி அழுதனர்.இதையடுத்து குழந்தையின் உயிரிழப்பிற்கு
காரணமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உறவினர்கள் எழும்பூர் மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் வலது கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.