நின்ற வேன் மீது மோதிய மோட்டார் சைக்கிள்!! சிகிச்சை பெற்று வந்த நண்பரை பார்த்துவிட்டு வரும்போது இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

Photo of author

By Amutha

நின்ற வேன் மீது மோதிய மோட்டார் சைக்கிள்!! சிகிச்சை பெற்று வந்த நண்பரை பார்த்துவிட்டு வரும்போது இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

விமான நிலைய மேம்பாலத்தில் நின்ற வேன் மீது பைக் மோதியதில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் நண்பர்கள் காயமடைந்தனர்.

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த இளம்பெண் பிரதீஷா வயது 23. அனகாபுத்தூரை சேர்ந்தவர்கள் செல்வன் வயது 26. மற்றும் கோபிநாத் வயது 23. இவர்கள் மூவரும் நண்பர்கள்.

இந்த நிலையில் காட்டாங்கொளத்தூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தங்கள் நண்பரை பார்த்துவிட்டு வர நண்பர்கள் மூவரும் சென்றனர். மூவரும் ஒரே பைக்கில் இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பைக்கை செல்வன் ஓட்டவே நடுவில் பிரதீஷா மற்றும் அடுத்து கோபிநாத் அமர்ந்து இருந்தனர்.

அவர்கள் மீனம்பாக்கம் விமான நிலைய எதிரே மேம்பாலம்மீது சென்றபோது அங்கே பிஸ்கட்,பிரட், விநியோகம் செய்யும் வேன் பஞ்சராகி நின்றது. நின்ற அந்த வேன் மீது செல்வனின் பைக் மோதியது. மோதிய வேகத்தில் நடுவில் இருந்த பிரதீஷா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செல்வன் மற்றும் கோபிநாத் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார்  வழக்கு பதிவு செய்து பலியான பிரதீஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் காயம் அடைந்த செல்வன், கோபிநாத் இருவரும் ஸ்டேன்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.