தியேட்டருக்குள் சமூக நீதி! வெளியே அநீதி? டிக்கெட் எடுத்தவர்கள் சீட்டை அபகரித்த திமுகவினர்

0
114

தியேட்டருக்குள் சமூக நீதி! வெளியே அநீதி? டிக்கெட் எடுத்தவர்கள் சீட்டை அபகரித்த திமுகவினர்

 

சேலத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தை பார்ப்பதற்கு டிக்கெட் எடுத்தவர்கள் சீட்டை டிக்கெட் எடுக்காமல் திமுகவினர் அபகரித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு மற்றும் பகத்பாசில் உள்ளிட்டோர் நடித்து வெளியாகியுள்ள படம் மாமன்னன்.விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் இது தான் நான் நடிக்கும் கடைசி படம் என்று அறிவித்துள்ளார்.

அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்த திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. மாமன்னன் திரைப்படத்தின், கதையே சமூகநீதியைக் காப்பாற்றுவது குறித்த கதையை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படும் நிலையில் அந்த படத்தை பார்க்க வந்த பொதுமக்களுக்கு அநீதி இழைத்துள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த சம்பவமானது சேலம் மாவட்டத்தின் லைன் மேடு பகுதியில் அமைந்துள்ள கே.எஸ். திரையரங்கில் நடந்துள்ளது. தியேட்டருக்குள் மாமன்னன் படம் ஓடிக்கொண்டிருக்க, இந்த திரையரங்கத்துக்குள் அப்பகுதியை சேர்ந்த இளைஞர் தன் மனைவி மற்றும் அவர்களின் குழந்தையுடன் படம் பார்க்க சென்றுள்ளார்.

 

ஆனால், அதற்கு முன்பாகவே சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளருமான ராஜேந்திரன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் சிலர் டிக்கெட் எடுக்காமலேயே தியேட்டருக்குள் சென்று படம் பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.

 

இதனால் ஏற்கெனவே பணம் கொடுத்து டிக்கெட் எடுத்திருந்தவர்களை அவர்களின் இருக்கையை ஆக்கிரமித்த திமுகவினர் திரையரங்குக்குள் அனுமதிக்காமல் வெளியே விரட்டியுள்ளனர். கையில் டிக்கெட் இருந்தும், திமுக கட்சியினரால் இருக்கை பறிக்கப்பட்டதால் கைக்குழந்தையுடன் அந்த இளம்பெண் வெகுநேரமாக வெளியே நிற்க வைக்கப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் தியேட்டருக்குள் அனுமதிக்கவில்லையென்றால்,டிக்கெட் புக் செய்த பணத்தையாவது திருப்பிக் கொடுங்கள் என பெண்மணி கூறியதையடுத்து, கோபமடைந்த திரையரங்க ஊழியர்கள், கடுமையாக திட்டியனுப்பியதால், அந்த பெண்மணியும் அவரது கணவரும் படம் பார்க்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். இந்நிலைமை அந்த தம்பதிகளுக்கு மட்டுமல்லாமல் அந்த காட்சிக்கு டிக்கெட் புக் செய்து வந்த பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சமூக நீதி குறித்து எடுக்கப்பட்ட இந்த படம் திரையரங்குக்குள் ஓட, திரையரங்கின் வெளியே அவரது கட்சியினரால் அநியாயம் செய்துள்ளனர் என அங்கிருந்த பொது மக்கள் புலம்பி வருகின்றனர்.