வில்லனாக இருந்து காமெடியாக மாறிய நடிகர்கள்…. யார்யார் தெரியுமா?

0
105
#image_title

வில்லனாக இருந்து காமெடியாக மாறிய நடிகர்கள்…. யார்யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில், பல நடிகர்கள் வில்லனாக நடித்த பின் ஹீரோவாக நடிப்பதும், ஹீரோவாக நடித்த பிறகு வில்லனாக நடிப்பதும் பொதுவான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது வில்லனாக இருந்து காமெடியனாக மாறிய நடிகர்களை பற்றி பார்ப்போம்.

அந்த காலத்தில் எம் ஆர் ராதா, அசோகன், பாலையா உள்ளிட்டோர்கள் வில்லனாகவும் காமெடியனாகவும் நடித்திருக்கிறார்கள். அதுபோன்று பல படங்களில் வில்லனாக மிரட்டி கதற வைத்த மணிவண்ணன், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், காதல் தண்டபாணி, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட நடிகர்கள் தற்போது காமெடியனாகவும் கலக்கி வருகிறார்கள்.

மணிவண்ணன்

மறைந்த நடிகர் மணிவண்ணன், 80, 90 காலகட்டங்களில் ஒரு சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த இயக்குனராகவும் வலம் வந்தவர். அந்த வகையில் கோபுரங்கள் சாய்வதில்லை, இளமை காலங்கள், ஜனவரி 1 உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் பல படங்களில் வில்லனாகவும் மிரட்டியிருக்கிறார். அதன் பிறகு சில படங்களில் காமெடியனாகவும் ரசிகர்களை ரசிக்க வைத்தவர் தான் மணிவண்ணன். கடைசியாக கடந்த 2013இல் நாகராஜா சோழன் எனும் படத்தை இயக்கி நடித்திருந்தார்.

மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலிகான், கடந்த 1990 இல் தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர். கேப்டன் பிரபாகரன், தாய்மொழி, மின்சார கண்ணா, நட்புக்காக உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதுபோல இராவணன், சிந்துபாத் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். தற்போது இவர் நானும் ரவுடிதான், ஜாக்பாட் உள்ளிட்ட சில படங்களில் காமெடியனாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ஆனந்தராஜ்

நடிகர் ஆனந்தராஜ், பல படங்களில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தாலும் கிட்டத்தட்ட 7 படங்களில் ஹீரோவாகவும் நடித்து பெயர் பெற்றவர். இவர் பெரும்பாலான படங்களில் மோசமான வில்லனாக நடித்திருப்பார். ஆனால் தற்போது தில்லுக்கு துட்டு, நானும் ரவுடிதான் உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

காதல் தண்டபாணி

மறைந்த நடிகர் காதல் தண்டபாணி, கடந்த 2004 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான காதல் திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர். இந்த படத்தின் கதாநாயகியாக நடித்திருந்த சந்தியாவின் அப்பாவாக நடித்து பரத் – சந்தியாவின் காதலை பிரிக்கும் கொடூர வில்லனாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி புகழ்பெற்றவர். ராகவா லாரன்ஸின் முனி படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். அதன் பிறகு சிவகார்த்திகேயன், சத்யராஜ் கூட்டணியில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடியனாக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பார்.

மொட்ட ராஜேந்திரன்

நடிகர் மொட்ட ராஜேந்திரன் திருமதி பழனிச்சாமி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானாலும், கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான நான் கடவுள் படமே இவருக்கு பெயரையும் புகழையும் பெற்று தந்தது. இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த வில்லன் கதாபாத்திரம் பார்க்கிறவர்களை நடுங்க வைத்தது. அந்த அளவிற்கு கொடூர வில்லனாக நான் கடவுள் படத்தில் மொட்ட ராஜேந்திரன் நடித்திருப்பார். தற்போது இவர் அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். அதிலும் சந்தானம்- மொட்ட ராஜேந்திரன் காம்போவில் வரும் காமெடிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Savitha