அண்ணாமலை அவர்களின் என் மண் என் மக்கள் நடைபயணம்!!! பொள்ளாச்சியில் இன்று தொடக்கம்!!!
அண்ணாமலை அவர்கள் மேற்கொண்டு வரும் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் இன்று(செப்டம்பர்23) பொள்ளாச்சியில் நடைபெறவுள்ளது.
அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் நோக்கத்துடன் பாஜக கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றார்.
அண்ணாமலை அவர்களின் இந்த நடைபயணம் கடந்த ஜூலை 28ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கியது. அண்ணாமலை அவர்களின் பாதயாத்திரையை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தொடங்கிய வைத்தார்.
இதையடுத்து அண்ணாமலை அவர்கள் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபயணம் மேற்கொண்டார். முதல் கட்டமாக 22 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார். அதில் 41 சட்டமன்ற தொகுதிகளில் இருக்கும் மக்களை சந்தித்து பேசினார்.
அடுத்து இரண்டாம் கட்டமாக கடந்த செப்டம்பர் 3ம் தேதி தனது நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை அவர்கள் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொடங்கிய தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் செப்டம்பர் 21ம் தேதி திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டார். நேற்று(செப்டம்பர்22) உடுமலை, மடத்துக்குளம் ஆகிய பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை சந்தித்து பேசினார். இதையடுத்து இன்று(செப்டம்பர்23) காலை மாவட்டம் பொள்ளாச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பாதயாத்திரை மேற்கொள்ளவுள்ளார்.
தற்பொழுது கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அண்ணாமலை அவர்களுக்கு கோவை மாவட்ட பாஜக கட்சி தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து அண்ணாமலை அவர்கள் இன்று(செப்டம்பர்23) மதியம் 3 மணியளவில் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேட்டைக்காரன்புதூரில் நடைபயணம் மேற்கொண்டு திறந்தவெளி வேனில் நின்றபடி பொதுமக்களிடையே பேசவுள்ளார்.
இதைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் பொள்ளாச்சியில் திருவள்ளுவர் திடலில் நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை அவர்கள் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் வரை நடந்து செல்லவுள்ளார். பின்னர் இரவு கோவை செல்லவுள்ளார்.
கோவையில் இன்று(செப்டம்பர்23) இரவு தங்கி நாளை(செப்டம்பர்24) காலை மாவட்டம் குனியமுத்தூர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை அவர்கள் செப்டம்பர் 25ம் தேதி கோவை கணபதி பஸ் நிலையத்திலும், செப்டம்பர் 26ம் தேதி கோவை ராம்நகர் ராமர் கோயிலில் இருந்தும் நடைபயணம் செய்யவுள்ளார்.