ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஓர் உயிரிழப்பு! இறுதி கடிதத்தில் பாய் பாய் அண்ட் மிஸ் யூ ரம்மி!
ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் பல உயிரிழப்புகள் ஏற்பட்ட வண்ணமே தான் உள்ளது. இதனை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என பாமக தலைவர் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் சென்னையில் பெயிண்டிங் கான்ட்ராக்ட் வேலை செய்து வரும் நாகராஜ் என்பவர் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் ரூபாய் இழந்துள்ளார். இதனால் கடன் அதிகமாகிவிட்டது. அதிலிருந்து மீள முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்திலும் ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு உயிரிழப்பு நடந்துள்ளது. ராசிபுரம் பகுதியில் பட்டணம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் தான் சுரேஷ். இவர் சில மாதங்களாக ரம்மி விளையாடி வந்துள்ளார். ஆரம்பத்தில் விளையாட்டாக ஆரம்பித்தது நாளடைவில் அதற்கு அடிமையாக மாறிவிட்டார். அதனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 5 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். அவர் முதலீடு செய்த பணத்திற்கு நிகராக பணத்தை எடுக்க முடியாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இறுதியில் இவருக்கு கடன் சுமை அதிகமாகி விட்டது. அதிலிருந்து வெளியே வர முடியாததால் கடிதம் ஒன்று எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில் பாய் பாய் அண்ட் மிஸ் யூ ரம்மி என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அவரது பெற்றோர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் ஆன்லைன் சூதாட்டத்தின் மேல் மக்களுக்கு உள்ள மோகம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. அதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.