இன்றிலிருந்து இவர்கள் அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்ப ஏற்பாடு!

Photo of author

By Parthipan K

இன்றிலிருந்து இவர்கள் அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்ப ஏற்பாடு!

ஒமைக்ரானின் வருகைக்கு பிறகு, இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. அதன் காரணத்தால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அந்த வகையில், மத்திய அரசு அலுவலகங்களில், பணிபுரியும் ஊழியர்களுக்கும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

அதன்படி, மத்திய அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, மத்திய அரசில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதையடுத்து, நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மத்திய அரசு ஊழியர்கள் கட்டுப்பாடுகள் நீங்கும் வரை அலுவலகம் வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களைப் பொறுத்தவரையில், மொத்தமுள்ள பணியாளர்களில் 50 விழுக்காடு பணியாளர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வரவேண்டும் என்றும், மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்தே தங்களது பணியை செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜனவரி 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என முதலில் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்திய அரசு அலுவலகங்கள் பிப்ரவரி 7ஆம் தேதி (இன்று) முதல் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் என, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்து உள்ளார். கொரோனா தொற்று குறைந்து வரும் காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மத்திய அரசு அலுவலகங்கள் இன்று முதல் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்பட உள்ளன. இதன் காரணமாக அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் தவறாமல் அலுவலகம் வர உத்தரவிடப்பட்டுள்ளது. அலுவலகங்களில் ஊழியர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்கவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.