மக்களே உஷார்.. நாளை முதல் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு!! ஆரஞ்ச் அலர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!!
ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொழிவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில தினங்களாக தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதேபோல் தெற்கு வங்கக்கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
இதன் காரணமாக தமிழகம், புதுவையில் தொடர்ந்து இடி மற்றும் மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம், புதுவை, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. ஆரஞ்ச் அலர்ட் என்பதற்கு அர்த்தம் மோசமான வானிலை என்பதாகும்.
வருகின்ற ஆறாம் தேதி வரை இந்த மழை தொடர இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அந்தந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:-
நவம்பர் 04: இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களாக கோவை, தேனி, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி இருக்கின்றது.
நவம்பர் 05: இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களாக சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருப்பத்தூர் இருக்கின்றது.
நவம்பர் 06: இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களாக தென்காசி, மதுரை, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி இருக்கின்றது.
அதேபோல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.