மீண்டும் பரவத் தொடங்கிய பறவை காய்ச்சல்!
பறவை காய்ச்சல் என்பது பொதுவாக, பறவைகளைத் தாக்குகின்ற ஒரு தொற்று நோயாகும். பறவைகளின் வயிற்றில் இந்த தீ நுண்மங்கள் பொதுவாக காணப்பட்டலும், சில பறவைகளிடமே அவை வெளித்தெரியும் நோயாக உருவெடுக்கின்றன.
வீட்டுப் பறவைகள் அல்லது வியாபார நோக்குடன் வளர்க்கப்படும் பறவைகளிடையே கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் ஏராளமான பறவை பண்ணைகள் உள்ளன. இப்பண்ணைகளில் உள்ள சில வாத்துகள் மற்றும் கோழிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தன.
பறவைகள் அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக திடீரென இறந்ததால் சந்தேகம் அடைந்த பண்ணையாளர்கள் கால்நடை ஆய்வகத்திற்கு பறவைகளின் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பினர். இதில் இறந்து போன பறவைகளுக்கு H5N1 வகை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து கேரள மாநில கால்நடை துறை அதிகாரிகளுக்கும் இது குறித்தான தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஆலப்புழா மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு சென்ற கால்நடைத் துறை அதிகாரிகள் அங்கு பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட பண்ணைகளில் ஆய்வு செய்த பின் அங்கு வளர்க்கப்பட்ட வாத்து மற்றும் கோழிகளை உடனே அழிக்க உத்தரவிட்டனர். அதன்படி வாத்துகள் மற்றும் கோழிகள் என சுமார் 20000க்கும் மேற்பட்ட பறவைகள் அழிக்கப்பட்டு அவற்றை குழி தோண்டி புதைத்தனர்.
இதற்கிடையே நோய் கண்டறியப்பட்ட இந்த பண்ணைகளில் இருந்த 13,500 முட்டைகள் மற்றும் 9650 கிலோ கோழி தீவனங்களும் அழிக்கப்பட்டன. இப்பகுதியில் உள்ள பண்ணைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து பண்ணைகள் அமைந்துள்ள பகுதிகளில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் மற்றும் அங்கு வசிப்போருக்கு நோய் அறிகுறி இருக்கிறதா? என்பதை கண்டறியும் பணியும் நடந்து வருகிறது.