சிலிண்டர் நிறுவனங்களில் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை குறித்து அடிக்கடி ஆய்வு நடத்த ஹைகோர்ட் உத்தரவு
தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரான சிவக்குமார் சென்னை நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரியும் மேலும் அந்த மனுவில் சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியாளர்களுக்குத் தேவையான முககவசம், கிருமிநாசினி,கையுறை போன்றவற்றை வழங்கவும் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், புஷ்பா சத்யநாராயணன் தலமையில் விசாரணைக்கு வந்தபோது, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த பதில் மனுக்களில், கிடங்குகளில் சிலிண்டர் நிரப்புவது மற்றும் டெலிவரி செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையான கிருமி நாசினி, முகக்கவசம், கையுறை ஆகியவற்றை வழங்க வேண்டுமென அனைத்து வினியோகஸ்தர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மருத்துவ செலவுக்கான 1லட்சம் ரூபாய்க்கு காப்பீட்டு தொகையும், ஒருவேளை விபத்தால் மரணம் நிகழ்ந்தால் அவரது குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் கருணைத் தொகையும் வழங்கப்படும் என மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தங்களில் அனைத்து விநியோகஸ்தரும் கையெழுத்திட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மேற்கொண்டு எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க தேவையில்லை என கூறிய நீதிபதிகள், சிலிண்டர் டெலிவரி பணியாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்.
மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை ஆய்வு அவ்வப்போது மேற்கொள்ள வேண்டுமென எண்ணெய் நிறுவனங்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வரும் மே 31 ஆம் தேதியுடன் நான்காம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் நேற்று மருத்துவக் குழுவினருடன் முதல் அமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
முதல்வர் தலைமையில் நேற்று காலை 11.30 முதல் 1 மணி வரை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் பீலா ராஜேஷ், சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை தலைவர் பிரப்தீப் கவுர், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு உள்ளிட்டோர் குழுவினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் வருகிற 31 ஆம் தேதி வரை 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா தோற்று அதிகமாகி கொண்டிருப்பதால் தமிழகத்தில் ஊரடங்கை மே 31 ஆம் தேதிக்கு பிறகு மேலும் 2 வாரங்கள் வரை நீட்டிக்கலாமா அல்லது ஊர டங்கை படிப்படியாக விலக்கிக் கொள்ளலாமா? பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கலாமா என்பதுக் குறித்து அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க மருத்துவப் பரிசோதனைகள் தொடர்பாக செயல்படுத்தப்பட வேண்டிய உத்திகள், மருத்துவ சிகிச்சை முறைகள் மற்றும் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஏற்கனவே உள்ள நோய்களை கண்டறிந்து இறப்பை முற்றிலுமாக தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள், முக்கியமாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் வராமல் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அக்கூட்டத்தில் கலந்துகொண்ட நிபுணர்கள் மே 31 ஆம் தேதிக்கு பிறகு பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிப்பதன் மூலம் நோய் தீவிரம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு அரசுக்கு எச்சரித்துள்ளனர்.
மேலும் கூட்டத்தில் பேசிய மருத்துவர்கள் பலர், ‘தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்’ என்றே அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு, மருத்துவ நிபுணர்கள் தமிழக அரசுக்கு வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்கள் மற்றும் அனைத்து மாவட்ட அவர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஜூன் 1 ஆம் தேதி முதல் மேலும் 14 நாட்களுக்கு நோய் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் நோய் தொற்று இல்லாத மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுக்கு வரவும் குறைந்த எண்ணிக்கையில் பொது போக்குவரத்துக்கள் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் மருந்துகளை எடுக்க மத்திய அரசும் மாநில அரசும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
சித்த மருத்துவத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க செய்யும் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் உள்ளிட்டவற்றைத் தமிழக அரசே மக்களுக்கு வீடுதோறும் சென்று வழங்கி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று பரவலை தடுக்கவும், சிகிச்சை வழங்கவும், நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான ஆர்செனிகம் ஆல்பம் – 30 (Arsenicum Album) என்ற ஹோமியோபதி மருந்தை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் எனவும், ஒரு மாதத்திற்குப் பின் இதே முறையில் மருந்து சாப்பிட வேண்டும் எனவும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
இந்தப் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு, இந்த மருந்தை பயன்படுத்தும்படி, கடந்த ஏப்ரல் 23-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதை பயன்படுத்தியவர்களுக்கு நல்ல பலனை தருவதாக ஹோமியோபதி மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மும்பையை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவரான ஜவகர் ஷா, 100 ஹோமியோபதி மருத்துவர்களை ஒன்றிணைத்து கொரோனா வராமால் தடுக்க உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் வகையில் சிறப்பு மருந்தை கண்டுபிடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்,
ஹோமியோபதி துறையில் சுமார் 40 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஜவகர் ஷா நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இந்த மருந்தை பயன்படுத்தினால் கொரோனா மட்டுமல்ல மற்ற எந்த நோய் பாதிப்பும் ஏற்படாத என கூறுகிறார். வெறும் ஆறு நாட்கள் இதனை பயன்படுத்தினால் போதும் என கூறப்படுகிறது. இந்த மருந்திற்கு CK1, CK2 என பெயரிடப்பட்டுள்ளது.
ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரையை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ள இந்த மருந்தை மும்பையை சேர்ந்த 22000 காவல்துறையினருக்கும், 4000 தீயனைப்பு துறை பணியாளர்களுக்கும், மும்பையில் கொரோனா தொற்று அதிகமிருக்கும் தாராவியை சேர்ந்த 1 லட்சம் பொதுமக்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்டது. மார்ச் மாத மத்தியில் தொடர்ந்து தொற்று அதிகரிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21ம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதனால் வேலைக்குச் செல்ல முடியாமல் பலரும் வீட்டுக்குள் முடங்கினர். ஐடி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு 1 முதல் 50 சதவீதம் வரை சம்பள குறைப்பு அறிவிக்க, தினமும் வேலைக்குச் சென்று வந்தால் மட்டுமே குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலையில் பலரும் பொருளாதார சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் வீட்டுக் கடன், தனி நபர் கடன், பொருட்கள் கடன் என எந்த தவணையையும் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இதனைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு, RBIயுடன் ஆலோசித்து மூன்று மாதங்களுக்கு (மே 31 வரை) தவணை நீட்டிப்பை அறிவித்திருந்தது. அதன் படி மூன்று மாத காலம் பயனாளர்கள் கடன் செலுத்த வங்கிகள் நிர்ப்பந்திக்கக் கூடாது. ஆனால் தவணை செலுத்தாத காலத்திற்கு வட்டி கணக்கிடப்பட்டு அசலில் இனைத்து அது மாத தவணையாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இது நிச்சயம் வங்கிகளுக்கு சாதகமான அறிவிப்பு தான் என்றாலும், தங்களை நிதி சுமையிலிருந்து தற்காலிகமாகக் காத்து கொள்ள பயனாளர்களுக்கு ஓர் வடிகாலாக இருந்தது.
தற்போது நான்காவது முறையாக மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பான்மையான மக்கள் இன்னும் வேலைக்கு செல்ல முடியாத நிலை நீடித்தது.
இதை கருத்தில் கொண்டும் இன்னும் மூன்று மாதங்களுக்கு தவணை செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்கலாமா என RBI ஆலோசித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்திய ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்தி காந்த் தாஸ் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முக்கியமாக ஏற்கனவே அறிவித்த தவணை அவகாச காலத்தை மேலும் மூன்று மாதம் நீட்டிப்பதாக அறிவித்தார்.
இதனால் EMI செலுத்த ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இது EMI சலுகை என கூறப்பட்டாலும், தவணை செலுத்தாத அந்த கால கட்டத்திற்கு வட்டி கணக்கிடப்பட்டு பயணர் கணக்கில் சேர்க்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடிய மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தத்தா வழக்கொன்றை தொடுத்தார் அதில் அவர் “முதன் முதலில் ஊரடங்கு அமல்படுத்த போது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி EMI செலுத்த மூன்று மாசம் அவகாசமளித்தது. மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் அந்த அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தவணை செலுத்தாத காலத்திற்கு வட்டி கணக்கிடப்பட்டு கடன் தாரரின் மொத்த கடன் நிலுவை தொகையுடன் கணக்கிடப்பட்ட வட்டி தொகை சேர்க்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சலுகை என அறிவித்துவிட்ட தவனை செலுத்தாத காலகட்டத்திற்கு வட்டி கணக்கிட்டு வசூலிப்பது சட்டத்திற்கு விரோதமானது. ஊரடங்கால் ஏராளமான பொதுமக்கள் வேலை இழந்துள்ள நிலையில், இது போன்ற நடவடிக்கை கூட்டு வட்டி போன்றது. இது அவர்கள் கடனை அதிகரித்து பாரமாக்கும். எனவே சலுகை அறிவிக்கப்பட்ட காலத்தில் வட்டியை வசூலிக்க நீதிமன்றம் தடை வதித்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஒரு வார காலத்திற்குள் இதற்க்கு பதிலளிக்க ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.
குவைத் முகாமில் போதிய உணவு கூட இல்லாமல் தங்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும் என மத்திய அரசிற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.
குவைத் பொதுமன்னிப்பு முகாமில் உணவு வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் மீது அந்நாட்டு காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். மற்றொருபுறம் நோய்ப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், குவைத்தில் சிக்கியுள்ள தமிழர்களை தாயகம் அழைத்து வர இந்திய வெளியுறவுத்துறை இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.
குவைத் நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அங்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, தாயகத்திற்கு அனுப்பத் தயாராக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குவைத் நாட்டின் மாங்காஃப் (Mangarf) என்ற இடத்தில் உள்ள ஆண்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் பலருக்கு நேற்றிரவு உணவு வழங்கப்படவில்லை. இதை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற சிலர், தங்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று குரல் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தமிழர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதாகவும், இதில் ஆந்திரத்தை சேர்ந்த ஒருவருக்கு மண்டை உடைந்து காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் உணவு கிடைக்கவில்லை என்று புகார் கூறியவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, முட்டி போட வைத்து, அவமானப்படுத்தப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மற்றொருபுறம், அரிதியா என்ற இடத்தில் உள்ள மகளிருக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் தங்களை உடனடியாக சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும், அதற்கான உத்தரவாதம் கிடைக்கும் வரை உணவு அருந்த மாட்டோம் என்றும் கூறி கடந்த 3 நாட்களாக உண்ணாநிலை மேற்கொண்டுள்ளனர். அம்முகாமில் இருந்த ஒரு பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு முகாம்களில் பெரும் அச்சமும், பதற்றமும் நிலவி வருகிறது.
குவைத்தில் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட இந்திய தொழிலாளர்களில் 7340 பேர் முகாம்களிலும், சுமார் 5,000 பேர் முகாம்களுக்கு வெளியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் ஏப்ரல் மாதத் தொடக்கத்திலிருந்து 50 நாட்களுக்கும் மேலாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மே மாதம் 7-ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான விமான சேவைகள் இயக்கப்படும் நிலையில், குவைத்தில் உள்ள இந்தியர்களில் சுமார் 4,000 பேர் இதுவரை தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களில் கடந்த 10-ஆம் தேதி குவைத்திலிருந்து சென்னைக்கு இயக்கப் பட்ட விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 186 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். அதன்பின் கடந்த 16 நாட்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட, சொந்த ஊர்களுக்கு அழைத்து வரப்படவில்லை.
குவைத் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள கேரளத் தொழிலாளர்களும், ஆந்திரத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் அதிக எண்ணிக்கையில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தங்களை அழைத்துச் செல்ல விமானம் இயக்கப்படாததால் தமிழர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மே 16-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரையிலான இரண்டாம் கட்ட வந்தே பாரத் இயக்கத்தின்படி, குவைத் உள்ளிட்ட எந்த நாட்டிலிருந்தும் தமிழ்நாட்டிற்கு விமானங்கள் இயக்கப்படவில்லை. மே 23-ஆம் தேதிக்கு பிறகாவது குவைத்திலிருந்து தமிழகத்திற்கு விமானங்கள் இயக்கப்படும்; அவற்றில் தாயகம் திரும்பலாம் என்றும் தமிழர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஜூன் மாத இறுதி வரை விமானங்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டிருப்பது குவைத்தில் தவிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்களிடையே நிலவும் ஏமாற்றத்தையும், மன உளைச்சலையும் அதிகப்படுத்தியிருக்கிறது.
தாயகம் திரும்ப முடியாமல் 50 நாட்களுக்கும் மேலாக தவிப்பதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக தமிழர்களை மீட்க விமானங்கள் இயக்கப்படாவிட்டால், மன உளைச்சல் காரணமாக இதுபோன்ற நிகழ்வுகள் தொடரக்கூடும். மற்றொருபுறம் குவைத் நாட்டில் இன்று வரை 21,967 பேர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் சராசரியாக ஆயிரம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப் படுகின்றனர். அவ்வாறு பாதிக்கப்படுவோரில் பெரும்பான்மையினர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாவர். பொதுமன்னிப்பு முகாம்களில் கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் போதிய அளவில் இல்லாததால் அங்கு எளிதாக கொரோனா வைரஸ் பரவக் கூடும் என்ற அச்சமும் தமிழகத்தினரிடையே நிலவி வருகிறது.
குவைத்தில் பொதுமன்னிப்பு முகாம்களில் சுமார் 450 பேர், வெளியில் 250 பேர் என தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 700 பேர் மட்டுமே உள்ளனர். அதிகபட்சமாக இரு விமானங்கள் மூலம் அவர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்து விட முடியும். எனவே, இனியும் தாமதிக்காமல், சிறப்பு விமானங்களை இயக்கி குவைத்தில் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களை அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்காக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளமான ட்விட்டரில் ஒவ்வொரு அரசியல் கட்சி தொண்டர்களும் தங்கள் கட்சி தலைவர்களை ஆதரித்தும்,எதிர் தரப்பினரை விமர்சித்தும் டிரெண்ட் செய்வது வழக்கமானது. இந்நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்து #கைப்புள்ள_ஸ்டாலின் என்ற ஹேஸ் டேக் டிரெண்டாகி வருகிறது.இதை நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் முன்னெடுக்க அதிமுக,பாமக மற்றும் பாஜக என திமுகவின் எதிர்தரப்பினர் இணைந்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இணையதள ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில், விடுதலை புலிகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டார். அந்த சமயம், சீமான் குறித்து தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் விமர்சித்து பேசியது குறித்து நெறியாளர் சீமானிடம் கூறி கருத்து கேட்டார்.
அதாவது, ” எனக்கு மன உளைச்சல் ஏற்படும் போது எல்லாம் நான் சீமானின் பேச்சைக் கேட்பேன். அவரது பேச்சு வடிவேலு பேசுவதை போல இருக்கும் என திமுக எம்பி செந்தில்குமார் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியது குறித்து நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என சீமானிடம் அந்த நெறியாளர் கேள்வி எழுப்பினர்.
அப்போது நெறியாளரின் கேள்விக்கு பதிலளித்த சீமான், “என் பேச்சே நகைச்சுவையாக இருக்கிறது என்றால், ஸ்டாலினின் பேச்சை என்ன சொல்வது. சட்டியில் இருந்தால்தான் அகப்பைக்கு வரும் என்பதையே சட்டையில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என கூறுபவர் தான் ஸ்டாலின்,” என திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சிக்கும் விதமாக நெறியாளரின் பேச்சுக்கு சீமான் பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில், சீமானை விமர்சனம் செய்த திமுகவினரை விமர்சிக்கும் விதமாக, நாம் தமிழர் கட்சியினர் திமுக தலைவரை கலாய்த்து #கைப்புள்ள_ஸ்டாலின், #ஜோக்கர்_ஸ்டாலின் மற்றும் #கோமாளி_ஸ்டாலின் என்னும் ஹேஸ்டேக்கை பயன்படுத்தி ட்விட்டரில் டிரெண்டாக்கியுள்ளனர். மேலும், திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்து பல்வேறு மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
The only reason behind this unofficial trending is @DrSenthil_MDRD
— விழித்திரு தமிழா (@vizithiru_tamiz) May 26, 2020
அதேபோல, திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்து பதிவிட்ட நாம் தமிழர் கட்சியினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘#இட்லி கறி சீமான்’ என்னும் ஹேஸ்டேக்கை திமுகவினர் டிரெண்ட்டாக்கியுள்ளனர்.
புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக பணம், நகை மட்டும் அல்லாது நிலங்களையும் செலுத்துவது வழக்கமாக உள்ளது. இதுவரை பக்தர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு நிலங்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் தமிழக பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கிய தமிழ்நாட்டில் இருக்கும் 23 சொத்துக்கள் உட்பட மொத்தமாக 50 சொத்துக்களை பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்தது.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கிய சொத்துகளை பொது ஏலத்தில் விற்பனை செய்யும் முடிவுக்கு அரசியல் கட்சியினர், பக்தர்கள் உள்ளிட்டோர் தங்களுடைய கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில் இது குறித்து விமர்சித்த பாஜகவின் தேசிய செயலாளர் ஹச்.ராஜா ஆந்திராவை கிறித்தவ மாநிலமாக்கும் முயற்சியின் முதல் படியே என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவருடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது.
திருமலா திருப்தி தேவஸ்தானம் திருப்தி கோவில் சொத்துக்களை விற்க நினைப்பது சட்ட விரோதமானது. கண்டிக்கத்தக்கது. ஒரு சர்ச் அல்லது மசூதி சொத்துக்களை விற்க ஜெகன் மோகன் முயற்சிப்பாரா? ஆந்திராவை கிறித்தவ மாநிலமாக்கும் முயற்சியின் முதல் படியே இது என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
திருமலா திருப்தி தேவஸ்தானம் திருப்தி கோவில் சொத்துக்களை விற்க நினைப்பது சட்ட விரோதமானது. கண்டிக்கத்தக்கது. ஒரு சர்ச் அல்லது மசூதி சொத்துக்களை விற்க ஜெகன் மோகன் முயற்சிப்பாரா? ஆந்திராவை கிறித்தவ மாநிலமாக்கும் முயற்சியின் முதல் படியே இது. https://t.co/Xeg2RizjPa
முன்னாள் தமிழக முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் வரும் ஜூன் 3 ஆம் தேதி வரவுள்ளது. இந்நிலையில் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை எவ்வாறு கொண்டாட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.
தரணியில் மூத்த, தனிப்பெரும் தமிழினத்தின் தகத்தகாய சூரியனாம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் சூன் 3. இந்த ஆண்டு 97-வது பிறந்தநாளாகும். இன்னும் மூன்று ஆண்டுகளில் நம் முத்தான தலைவரின், நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இருக்கிறோம். திருவாரூர் – திருக்குவளையில் பிறந்து, தீந்தமிழ்நாட்டுக்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, 95 ஆண்டுகள் வரை இனத்துக்காகவும், மொழிக்காகவும், நாட்டுக்காகவும், கால் நகம் தேய நடந்து நடந்து, கை நகம் தேய எழுதி எழுதி இமயம் போலக் குவித்து, இன்றைய தினம் பேரறிஞர் அண்ணா அவர்களின் அருகே வங்கக் கடலோரம் வாழ்நாளில் கிட்டாத ஓய்வினை மேற்கொண்டிருக்கிறார், அந்த ஓய்வறியா உதயசூரியன்!
ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை நாம் கொண்டாடுவது என்பது, தலைவரைப் போற்றிப் பாராட்டுவதற்காக மட்டுமல்ல; அவர் செய்து வைத்த அளப்பரிய சாதனைகளுக்கு நாம் செலுத்தும் நன்றியின் காணிக்கையாகத்தான் அத்தகைய பிறந்தநாள் விழாக்களைக் கொண்டாடி, குதூகலம் கொண்டோம்!
1957-ம் ஆண்டு முதல் தனது இறுதி மூச்சு நின்ற காலம்வரை நடந்த தேர்தல்கள் அனைத்திலும் வென்று, சட்டமன்றத்தில் பங்கெடுத்து, இச்சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் அவர் ஆர்வத்துடனும், தனித் திறமையுடனும் வாதாடினார். 1969-ம் ஆண்டு முதல் ஐந்து முறை – மொத்தம் 19 ஆண்டுகள், இத்தாய்த் திருநாட்டின் முதலமைச்சராக இருந்து, அவர் இட்ட ஒவ்வொரு கையெழுத்தும் இன்பத் தமிழகத்தின் தலையெழுத்தைத் தகவமைத்து மாற்றுவதாகத்தான் அமைந்திருந்தன.
ஒரு இலட்சியத்துக்காகப் போராடியவரே, அதே இலட்சியத்தை நிறைவேற்றும் இடத்துக்கும் வந்து, அதை நிறைவேற்றியும் காட்டிய மாபெரும் பெருமையும், வரலாற்று உரிமையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கே உண்டு!
‘சாமானியர்களின் தலைவர்’ என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர் மட்டுமல்ல; அனுதினமும் அப்படியே நடந்தும் காட்டியவர். ஏழை, எளிய, பாட்டாளி வர்க்கத்துக்கும், ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சமூகத்துக்கும் எது அத்தியாவசியமாகத் தேவையோ, அதை அவர்களது இடத்தில் இருந்தே சிந்தித்தவர் கலைஞர் அவர்கள்.
நாட்டுக்குத் தொண்டராக இருந்த அவர், ஒவ்வொரு வீட்டுக்கும் தூண்டா மணிவிளக்காக இருந்தார். அதனால்தான் இந்த நாட்டுக்கே, நானிலமும் வியந்தேத்தும் தலைவராக உயர்ந்தார்!
முதுமை நிலையில், வீட்டில் ஓய்வெடுத்த காலத்தில் கூட அவரது இதயம், இம்மக்களுக்காகத்தான் துடித்தது; அவர்களுக்காகவே எப்போதும் சிந்தித்தது. எங்களை நோக்கி அவர் இட்ட கட்டளைகள் அனைத்தும், மக்கள் நலன் சார்ந்ததாக – மேம்பாடு சார்ந்ததாக மட்டுமே இருக்கும். தமிழ்நாட்டு மக்களுக்காகவே சிந்தித்து, தமிழ்நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்து, இயங்கிய அந்த இணையிலாத் தலைவரின் பிறந்தநாளை, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டாடுவதே பொருத்தமானதாகவும், சரியானதாகவும் இருக்கும்.
அதுவும் கொரோனா என்ற கொடிய நோய்த்தொற்று பரவி பெரும் பரிதவிப்பையும் இன்னலையும் மக்கள் சந்தித்து வரும் காலம் இது. ஒருபக்கம் நோய்த்தொற்று குறித்த பயமும், இன்னொரு பக்கம் பொது முடக்கம் காரணமாக வாழ்க்கையும் – வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு மக்கள் எதிர்கொள்ளும் துன்ப துயரங்களும், காணக் கண் கூசத்தக்க இன்றைய மோசமான காட்சிகளாக இருக்கின்றன.
நோய்த் தொற்று குறித்து அரசாங்கத்துக்கு காலத்தே எச்சரிக்கை விடுத்து அறிக்கைகள் விட்டதோடு தனது கடமை முடிந்ததாக தி.மு.க. இருந்துவிடவில்லை.
மக்களின் அச்சம் போக்கும் விழிப்புணர்வு பிரச்சாரத்தைச் செய்தோம். முகக்கவசம், கிருமிநாசினி போன்ற பொருட்களையும் வழங்கினோம். இதன் அடுத்தகட்டமாக அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் வழங்கினோம். பல இடங்களில் நிதி உதவியும் செய்தோம். மேலும், உணவுகள் தயாரித்துப் பல லட்சம் பேரின் பசியை ஆற்றினோம். கொரோனாவுக்கான ஊரடங்கு காலம் முதல் இதனைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் களத்தில் நின்று மக்களுக்குக் காவல் அரணாக, உதவிடும் கரங்களாக இருந்தார்கள்; இருந்தும் வருகிறார்கள்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இருந்திருந்தால், இதைப் பார்த்துப் பரவசம் கொண்டிருப்பார். இவற்றைச் செய்யவே இன்முகத்துடன் கட்டளையிட்டிருப்பார். அவரே பல இடங்களில் பொருட்கள் வழங்க ஓடோடி வந்திருப்பார். அத்தகைய தலைவரின் பிறந்தநாளான சூன் 3-ம் நாளையும், இதுபோன்ற நல்ல உதவிகள் செய்ய உகந்த நாளாக மாற்றிக் காட்ட வேண்டும் என்று, திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோளாக வைக்கிறேன்.
கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம், முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்குதல், அரிசி, பருப்பு போன்ற மளிகைப் பொருட்கள் வழங்குதல், காய்கறிகள் வழங்குதல், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி செய்தல், அபலைகள், வீடற்றவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவளித்தல், கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தல் என, நம்மால் முடிந்த அளவிலான பணிகளை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளில் செய்வதன் மூலமாக, அந்தச் செந்தமிழர் தலைவர், எங்கும் நிறைந்தும் வாழ்கிறார், எல்லோரையும் வாழ வைக்கிறார், வாழ்வாங்கு வாழ வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை நிரூபிப்போம்!
சூன் 3 – கலைஞரின் பிறந்தநாள் மட்டுமல்ல; அவர் பிறந்ததன் நோக்கங்களை, அவரது இலட்சியங்களை, நாம் நம் இதயங்களில் ஏந்தி நிறைவேற்றிடவும், நிறைவேற்ற உறுதி கொள்ளவுமான நாள் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதால், பள்ளிகள் திறப்பதை மத்திய மாநில அரசுகளை தள்ளி வைத்துள்ளன.
பெரும்பாலும் ஜூன் முதல் வாரத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நடப்பு கல்வியாண்டு துவங்கிவிடும் என்பதால், மாணவர்களின் நேரம் வீணாவதைத் தடுக்கு ஆன்லைன் எனப்படும் இணையதளத்தின் மூலம் கல்வி கற்பிக்கும் முறையை அரசு பரிந்துரையின் பெயரில் பெரும்பாலான பள்ளிகள் தற்போதே துவக்கி விட்டன.
இந்நிலையில் இணைய தளத்தை கையாளும் மாணவர்கள் தங்கள் பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மாணவர்களுக்கான சைபர் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த கையேட்டைப் பள்ளிகளுக்கு CBSE வெளியிட்டுள்ளது.
இதில், 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான பல்வேறு வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், இணையதளம் நட்பின்போது செய்யக் கூடியவை, செய்யக்கூடாத நடவடிக்கைகள் என்னென்ன, அதனால் ஏற்படும் பின் விளைவுகள் என்ன என்பது குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
பதின் பருவத்தினர் எனப்படும் டீன்ஏஜ் மாணவ, மாணவிகள், இனக்கவர்ச்சி தூண்டலால் சிலருடன் உறவில் ஈடுபடுகின்றனர். அந்த உறவிலிருந்து வெளியேறும்போது தங்களின் நட்புகளால் பழி வாங்கப்படுகின்றனர்.
இதனால், அவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஆபாசமாக வெளியிட்டு பழி வாங்குகின்றனர். இவை குறித்து மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பதின்வயது சிறுமியை அவள் மீது பொறாமை கொண்ட வகுப்பு மாணவர்கள், முன்னாள் காதலன் அல்லது சமூக வலைத்தளங்களில் யார் என்று அறியப்படாத ஒரு நண்பனால் கூட பழிவாங்கலாம்..
இணையத்தினால் வரும் அபாயங்களை உணர்ந்து, அந்த தொடர்பிலிருந்து விலகும் போதும் இதே பிரச்னைகளை சம்பந்தப்பட்டவர் எதிர்கொள்ளக் கூடும் என்பதால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து CBSEவாரிய மூத்த அதிகாரி கூறுகையில், “மாணவர்கள் தங்களின் ஆன்லைன் நண்பர்கள், நிஜ வாழ்க்கை நண்பர்களுடனான ஆன்லைன் தகவல் தொடர்புக்கும் வரம்புகளை நிர்ணயித்துக் கொள்வது அவசியம். ஆன்லைன் மூலம் அனுப்பப்படும் புகைப்படங்கள், காணொளிகள், உரையாடல்களை பகிர்வதற்கும் வரம்பு இருக்க வேண்டும். இந்த தகவல்களை இவர் மட்டும்தான் பார்க்க வேண்டும், படிக்க வேண்டும் என்று நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக, பழிவாங்கும் ஆபாச வலையில் மாணவர்கள் விழாமல் கவனமாக இருக்க வேண்டும். 14 முதல் 18 வயதுக்குட்பட்ட பதின் பருவத்தினர் பழிவாங்கும் ஆபாச நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த கையேட்டை கீழே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உலக அளவில் கொரோனா நோய்த் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகத்தில் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை இன்னும் முழுவதுமாக தளர்த்தவில்லை. கடந்த மூன்று மாதங்களாக உலகம் முழுவதும் இதே நிலை தான் நீடிக்கிறது.
இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால், தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே இரண்டாவது உச்சநிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும் என உலக சுகாதார நிறுவமன் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் ஆரோக்கிய அவசரநிலை பிரிவு செயல் தலைவரான மைக்கல் ரேயான் “கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 55 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது. 3.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் சில நாடுகளில் கொரோனா தொற்று இறங்குமுகமாக உள்ளதால், முற்றிலும் ஒழிந்து விடும் என நாம் ஊகிக்க வேண்டாம்.
கொரோனா வைரஸ் தொற்று முழுவதுமாக ஒழியாத நிலையில், அது மீண்டும் அதிகரிக்காமல் இருக்க அனைத்து நாடுகளும் கவனமாக இருக்க வேண்டும்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால், தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே அதன் இரண்டாவது உச்சநிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும். இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.” என்று கூறியுள்ளார்.