இலங்கையில் தமிழர்களின் நிலை பூஜ்யம்: அதிர்ச்சி தகவல்
இலங்கையின் புதிய அதிபராக கோத்தபயா ராஜபக்சே சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் இன்று அந்நாட்டின் அமைச்சரவை விரிவாக்கப்பட்டது
மொத்தம் 35 மந்திரிகள் மற்றும் 3 துணை மந்திரிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் இவர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை என்ற சோகமான செய்தி வெளிவந்துள்ளது. ஏற்கனவே கடந்த 22ஆம் தேதி 16 மந்திரிகளுடன் கோத்தாபய ராஜபக்ச பதவி ஏற்ற நிலையில் தற்போது அமைச்சர்கள் விரிவாக்கம் நடந்தது
இதில் கோத்தபாய ராஜபக்சவின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்சவிற்கு வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை வழங்கப்பட்டது. இதனை அடுத்து ராஜபக்சே குடும்பத்தினர் மூவர் தற்போது அதிகாரத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மொத்தமுள்ள 38 மந்திரிகளில் முற்றிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது இலங்கைவாழ் தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக இருந்ததால் அந்த கோபத்தில் அவர் தமிழர்களுக்கு மந்திரி பதவி கொடுக்காமல் மந்திரி சபையை உருவாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பெரும் பரபரப்பு
திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து அண்ணா அறிவாலயத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் உள்ள உள்ள அண்ணா அறிவாலயம் எப்போதும் பரபரப்புடன் இயங்கி வரும் திமுகவின் தலைமை அலுவலகம் ஆகும். இந்த அலுவலகத்தில் எப்போதும் திமுக தொண்டர்கள் கூடி ஆலோசனை நடத்தி வருவார்கள்.
இந்த நிலையில் சற்றுமுன் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த இந்த வெடிகுண்டு மிரட்டல் இந்தி மொழியில் கூறப்படதாகவும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவுடன் தொடர்பை துண்டித்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து உடனடியாக அண்ணா அறிவாலயத்தில் இருந்த திமுக தொண்டர்கள் வெளியேற்றப்பட்டு அண்ணா அறிவாலய கட்டிடம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்களால் சோதனை செய்யப்பட்டு வருகிறது
திமுக ஆரம்பித்து வைத்ததை சிறப்பாக செய்து முடித்த பாமக
சமீபத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலின் பிரச்சாரத்தின் போது தலித் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக அப்போது வெளியாகியிருந்த நடிகர் தனுஷ் நடித்திருந்த அசுரன் படத்தினை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்க்க சென்றிருந்தார்.
படம் பார்க்க சென்றிருந்த தியேட்டரில் தன்னுடைய அருகில் யாரையும் விடாமல் அங்கேயே தீண்டாமையை கடைபிடித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது விமர்சனம் எழுந்தது. இந்த விமர்சனம் மறைவதற்குள் அந்த படத்தை பார்த்து பஞ்சமி நிலம் குறித்து ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்து அடுத்த பிரச்சனையை கிளப்பி விட்டது.
அதாவது அசூரன் படத்தை பார்த்த ஸ்டாலின் அந்த படத்தில் வருவது போல தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை எல்லாம் மீட்க வேண்டும் என தன்னுடைய ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலம் தான், முடிந்தால் அதை முதலில் உரியவர்களிடம் ஒப்படையுங்கள் என ஒரு ட்விட்டர் பதிவை போட அது தற்போது திமுகவை நீதிமன்ற வழக்கு வரை இழுத்து வந்துள்ளது.
பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல… பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – ஆஹா…. அற்புதம்… அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் கருத்துக்கு பதிலளித்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். இத்துடன் முரசொலி அலுவலகத்திற்கான பட்டாவை இணைத்தும் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த மருத்துவர் ராமதாஸ் பட்டாவை காட்டிய ஸ்டாலின் அதற்கான மூலப் பத்திரத்தை வெளியிட வேண்டும் என்றும் கேட்டிருந்தார். மேலும் இதற்கு அதிமுகவும், பாஜகவும் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் தான் இருக்கிறது. உரிய நேரத்தில் அதற்கான ஆவணங்களை வெளியிடுவதாகவும் தெரிவித்தனர்.
1. முரசொலி நிலத்தின் மூலப்பத்திரத்தை அதன் நிர்வாகம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இன்றும் தாக்கல் செய்யவில்லை.மாறாக ஆணையத்துக்கே மிரட்டல் விடும் வழக்கமான வேலையை தான் திமுக செய்திருக்கிறது. மிரட்டல் விடுப்பதை விடுத்து மூலப்பத்திரத்தை காட்டுங்கள்.அது தான் அறம்.அது தான் நேர்மை!
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் தேசிய பட்டியலின ஆணையத்திடம் இது குறித்து புகார் அளித்தார்.
இதையடுத்து, முரசொலி அலுவலகம் விவகாரம் தொடர்பான இந்த புகாரை விசாரிக்க, உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ் அனுப்பி வைத்தது. இதனையடுத்து, தேசிய பட்டியலின ஆணையத்திடம் உதயநிதி ஸ்டாலின் ஆஜராகாமல், அவருக்கு பதிலாக திமுக அமைப்புச் செயலாளராக பதவி வகிக்கும் ஆர்.எஸ்.பாரதி ஆஜராகினார்.
அந்த விசாரணைக்கு பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, இந்த புகார் பொய் என்று கூறிய அவர், மேலும் பாமக நிறுவனர் ராமதாசுக்கு 1000 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அவை யார் பெயரில் உள்ளன என்பது பற்றியும் விரைவில் அறிவிக்க போவதாகவும், மேலும் அவர் மீது முரசொலி விவகாரத்தில் பொய்யை பரப்பியதற்காக அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஆர்.எஸ்.பாரதி கூறியபடி இது வரை திமுக தரப்பில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மீது எந்த அவதூறு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் உண்மைக்கு புறம்பான, அடிப்படை ஆதாரமற்ற, அவதூறான குற்றச்சாட்டை முன் வைத்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று எச்சரித்த பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் அவர் சார்பில் அவரது பாமக வழக்கறிஞர் கே.பாலு மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
முரசொலி நில விவகாரத்தில் மருத்துவர் ராமதாஸ் மீது திமுகவினர் அவதூறு வழக்கு தொடருவதாக கூறியிருந்தும் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் நிலைமையை சாதகமாக பயன்படுத்தி கொண்ட பாமக அவதூறு வழக்கு தொடருவதாக கூறியவருக்கே நோட்டிஸ் அனுப்பி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.
தளபதி 64: டெல்லி படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்
தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக டெல்லியில் நடைபெற்று வருவது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்து வருவதால் டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் ஆண்ட்ரியா, மாளவிகா மேனன் உள்பட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த நான்கு வாரங்களுக்கு மேல் டெல்லியில் நடைபெற்று வந்த ’தளபதி 64’படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்து விட்டதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி டெல்லியிலிருந்து சென்னை திரும்ப இருப்பதாகவும் அவர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து எடுத்த புகைப்படம் ஒன்றையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் ’தளபதி 64’படத்தில் நடிக்கும் சாந்தனு உடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து ’தளபதி 64’ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற இருப்பதாகவும் அங்கு உள்ள சிறைச்சாலை ஒன்று இந்த படத்தின் படப்பிடிப்புக்காக தயார் நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
வாட் சப்பிலும், பேஸ் புக்கிலும் சிங்கிள், முரட்டு சிங்கிள், 90’s கிட்ஸ்க்கு திருமணம் ஆகவில்லை என்ற மீம்ஸ்களையும், காமெடிகளையும் எல்லோரும் கடந்திருப்போம். இது ஏதோ ஒரு செய்தி என்று கடந்து போய் விட முடியாது. உண்மையிலேயே பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், குறைந்து கொண்டு தான் வருகிறது.
குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் இதன் தாக்கம் அதிகமாகவே தெரிகிறது. ஒரு மாவட்டத்தில் 1000 ஆண் குழந்தைகள் பிறந்தால் 937 பெண் குழந்தைகள் தான் பிறக்கின்றன. அரியலூர், சென்னை, திண்டுக்கல், ராமநாதபுரம், சேலம் போன்ற ஊர்களில் இன்றும் பெண் சிசு கொலை நடந்து கொண்டு தான் இருக்கிறது. 1992 ல் இதற்கான சட்டம் இயற்றியும், கடுமையான தண்டனைகள் விதிக்கப் படாததால், இன்றளவும் சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு நடந்து கொண்டு தான் இருக்கிறது.
பெண் பிள்ளைகள் என்றால் ஏன் இவ்வளவு தயக்கம். படிப்பு திருமணம், பாதுகாப்பு போன்ற காரணங்களால் பெண் குழந்தைகள் பிறப்பை சிலர் ஏற்க மறுக்கின்றனர். இதற்கு உதாரணம், சமீப காலங்களில் பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் தான்.
இதற்கான முழுப் பொறுப்பும் இந்த சமூகத்தையே சாரும். வேலியே பயிறை மேய்வது போல, பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய இந்த சமூகம், ஆண்களின் தவறுகளுக்கு துணைபோகிறது. இதன் விளைவு, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று, கருவிலேயே கருவறுக்கப் படுகின்றனர் குழந்தைகள்.
அடுத்து வரதட்சணைப் பிரச்சினை. இது இன்னும் ஓயவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இந்த பிரச்சினை படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல், வியாதியாய் பரவியுள்ளது. இந்த மாதிரியான, சமூக அவலங்களும், கேடுகளும் பெண் குழந்தைகள் பிறப்பை கேள்விக்குறியாக்குகிறது. இதன் விளைவுகள் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டது. அரசு இதில் தீவிர கவனம் செலுத்தாவிட்டால், இனி வரும் ஆண்டுகளில் பேச்சுலர்ஸ்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும்.
சூர்யாவின் அடுத்த படத்தில் சசிகுமார்-சமுத்திரக்கனி
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ’சூரரைப்போற்று’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் சூர்யா அடுத்ததாக ஹரி இயக்கும் ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்க உள்ளதாகவும், அதனை அடுத்து அவர் வெற்றிமாறன், பாலா, கௌதம் மேனன் ஆகியோர்களின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் சூர்யா தன்னுடைய 2டி நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தில் சசிகுமார் மட்டும் சமுத்திரக்கனி இணைந்து நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தின் நாயகியாக ஜோதிகா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னையில் இன்று நடைபெற்ற இந்த படத்தின் பூஜையில் சூர்யா, ஜோதிகா, சமுத்திரக்கனி, சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்தில் நகைச்சுவை கேரக்டரில் சூரியும், இன்னொரு முக்கிய கேரக்டரில் கலையரசனும் நடிக்க உள்ளனர்
டி இமான் இசையில் ஆர்.வெல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாக இருக்கும் இந்த படத்தை சரவணன் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு கிராமத்து கதை என்றும், நீண்ட இடைவெளிக்குப்பின் ஜோதிகா நடிக்கும் கிராமத்து படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது
41000 புள்ளிகளுக்கு மேல் மையம் கொண்ட சென்செக்ஸ்: மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்
பெரும்பாலான உலக பங்கு சந்தைகள் இன்று இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகின்ற நிலையில் இந்திய பங்கு சந்தை ஏறு முகத்தில் வர்த்தகம் ஆகி வருவது இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய பங்கு சந்தைகளான பிரான்ஸ், ஜெர்மனி, லண்டன் ஆகிய மூன்று சந்தைகளும் -0.19 முதல் -0.38 வரை தொடர்ந்து இறங்கு முகத்தில் வர்த்தகமாகி வந்தன.
அதே போல ஆசியாவில் வர்த்தகம் ஆகும் பெரும்பாலான ஆசிய பங்கு சந்தைகள் அனைத்தும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகி வந்தன. குறிப்பாக ஆசிய பங்கு சந்தைகளில் அதிகபட்சமாக சீனாவின் ஷாங்காய் காம்போசைட் -0.47 சதவிகித இறக்கத்தில் வர்த்தகமாகி வந்தது.
நேற்று மாலை வர்த்தகம் முடிவடைந்த நிலையில் இந்திய பங்கு சந்தை குறியீடு சென்செக்ஸ் 41,080 என்கிற புதிய உச்சத்தில் வர்த்தகம் ஆகிய நிலையில் நிறைவடைந்தது. இன்று காலையில் வர்த்தகம் ஆரம்பித்த நிலையிலேயே சென்செக்ஸ் 41,161புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,163 என்கிற உச்ச புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருந்தது. பின்னர் மதியம் 2.15 மணி அளவில் சென்செக்ஸ் 33 புள்ளிகள் மட்டுமே ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வந்தது.
அதே போல மும்பை பங்கு சந்தை குறியீடு நிஃப்டி நேற்று மாலை வர்த்தக முடிவில் 12,100 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை வர்த்தகம் ஆரம்பிக்கும் போது 12,132 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, அதிகபட்சமாக12,144 என்கிற அதிகபட்ச புள்ளியைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருந்தது. இந்நிலையில் நேற்றைய குளோசிங் புள்ளியை விட சுமார் 23 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகமாகியது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்பதியுள்ளது..
இதனையடுத்து சென்செக்ஸின் 30 பங்குகளில் 13 பங்குகள் ஏற்றத்திலும், 17 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகி வந்தன. பி.எஸ்.இ-யில் பட்டியலிடப்பட்ட 2,551 பங்குகள் வர்த்தகமாகி வருகின்றன. இதில் 1,168 பங்குகள் ஏற்றத்திலும், 1,192 பங்குகள் இறக்கத்திலும், 191 பங்குகள் எந்தவொரு விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு வந்தன. மேலும் மொத்தம் வர்த்தகம் ஆகும் 2,551 பங்குகளில் 43 பங்குகளின் விலை 52 வார அதிகபட்ச விலையிலும், 100 பங்குகளின் விலை 52 வார குறைந்தபட்ச விலையிலும் வர்த்தகமாகி வந்தன.
குறிப்பாக பார்தி இன்ஃப்ராடெல், யூபிஎல், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், டாடா ஸ்டீல் போன்ற நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ஜி எண்டர்டெயின்மெண்ட், ஹீரோ மோட்டோ கார்ப், ஹெச்டிஎஃப்சி, ஹெச் டி எஃப் சி பேங்க், பஜாஜ் ஃபனான்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.50 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. அடுத்ததாக ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 62.83 டாலர் என்ற நிலையிலும் வர்த்தகமாகி வந்தது.
பதவியேற்க சில மணி நேரமே: அதற்குள் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்!
மகாராஷ்டிரா மாநில முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்க இன்னும் ஒரு சில மணி நேரமே இருக்கும் நிலையில், திடீரென அஜித் பவார் தான் வருங்கால முதல்வர் என குறிப்பிட்டு மும்பையின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பாஜக அரசுக்கு திடீரென ஆதரவு கொடுத்து விட்டு அதன் பின்னர் அதே வேகத்தில் திடீரென ஆதரவை வாபஸ் பெற்ற அஜீத் பவார் மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்து தற்போது துணை முதல்வராகவும் பதவி ஏற்க உள்ளார்
இந்த நிலையில் இன்று மும்பையில் பல சாலைகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் அடுத்த முதல்வர் அஜித் பவார் தான் என்றும் அவரது பின்னால் தான் மராட்டிய மாநிலம் செல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களுக்கு பின்னணியில் அஜித் பவார் தான் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் சிவசேனா தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.
பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த கூட்டணி ஆட்சியை ஐந்து வருடங்களுக்கு பிரச்சனை இல்லாமல் கொண்டு செல்ல வேண்டும் என சிவசேனா நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், பதவி ஏற்பதற்கு முன்னரே கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு போஸ்டர் ஒட்டுவது கூட்டணி தர்மத்திற்கு அழகா? என சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது
ஆனால் சில தொண்டர்கள் ஆர்வக்கோளாறில் இவ்வாறு போஸ்டர்கள் ஒட்டி இருக்கலாம் என்றும் இந்த போஸ்டருக்கு அஜித் பவாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அஜித் பவார் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் ’சும்மா கிழி கிழி’ மழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழை பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் மீண்டும் சென்னைக்கு பலத்த மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்
மழை குறித்த விபரங்களை அவ்வப்போது ஃபேஸ்புக்கில் பதிவு செய்து வரும் தமிழ்நாடு வெதர்மேன் என்ற பிரதீப் ஜான் இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் கூறியபோது, ‘நேற்றிரவு சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்தது ஒரு மழையே இல்லை. இதைவிட பெரிய மழை நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1,2 ஆகிய தேதிகளில் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை மக்களை மழை வச்சு செய்ய போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்
சென்னையில் பகலில் வானம் சற்று வெறிச்சோடியிருக்கும் என்றும் சில இடங்களில் சூரியன் சுட்டெரிக்கும் என்றும் ஆனால் இரவு மற்றும் அதிகாலை மழை வெளுத்து வாங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
நேற்று தாம்பரம் 6 மணி நேரத்தில் 146 மிமீ மழை பதிவாகியுள்ளதாகவும், மற்ற பகுதியிலும் நல்ல மழை பெய்துள்ளதாகவும் இதுவொரு மிகச் சிறந்த மழை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
சென்னை புறநகரில் ஏற்கனவே நேற்றிரவு பெய்த மழையால் வீடுகள் மிதந்து வரும் நிலையில் அடுத்து வரும் மழைக்கு தாங்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
பாமக அதிமுக கூட்டணி தொடருமா? அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் நிகழ்வுகளை கவனிக்கும் போது அதிமுக மற்றும் பாமக இடையேயான கூட்டணி தொடருமா? இல்லையா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியிலும் இரண்டு கட்சி தொண்டர்கள் மத்தியிலும் ஏற்பட்டது. இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் பாமக இளைஞர் அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது தமிழக மக்களுக்கும்,அதிமுக மற்றும் பாமக கட்சி தொண்டர்களுக்கும் ஏற்பட்டிருந்த சந்தேகத்தையும், செய்திகளில் வெளியான சர்ச்சைகளுக்கும் விளக்கம் அளிக்கும் வகையில் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக அதிமுக கூட்டணியில் தொடரும் என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் உறுதியாக தெரிவித்துள்ளார்.
Edappadi Palanisamy with Dr Ramadoss-News4 Tamil Latest Political News in Tamil
இதன் மூலம் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி விவகாரத்தில் பாமகவின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அவர் அறிவித்துள்ளது அக்கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர் அங்கு பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .
மேலும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளதாகவும், அதிமுக கூட்டணியில் பாமக தொடரும் எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் அவர்களின் இந்த பேட்டி மூலம் அதிமுக தரப்பும் உற்சாகம் அடைந்துள்ளது. இதன் மூலமாக வடதமிழகத்தில் கணிசமான இடங்களை வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக அன்புமணி ராமதாஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசுவதை வைத்து, பாமக கூட்டணியில் இருந்து பிரிந்துவிடுமோ என்ற சந்தேகத்துடன் இருந்தது அதிமுக தரப்பு . ஆனால் அந்த சந்தேகத்தையெல்லாம் போக்கும் வகையில் தற்போது அன்புமணி ராமதாஸ் பேட்டி கொடுத்திருப்பது அதிமுக மட்டுமன்றி பாமக நிர்வாகிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Anbumani Ramadoss-News4 Tamil Latest Political News in Tamil
இந்த பேட்டியின் போது தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி அதற்காக நிதி ஒதுக்கீடு செய்தது வரவேற்க வேண்டிய ஒன்று என்றும், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்பதே தனது நோக்கமும், விருப்பமும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும், எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்என்றும் அவர் கேட்டு கொண்டார்.