பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதி… அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்!

Photo of author

By CineDesk

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் படிப்படியாக குறைந்து, 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கோவேக்சின், கோவிட்ஷீல்டு என உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் கொரோனா தடுப்பூசிகளை எல்லாம் தாண்டும் விதமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்து வருகிறது. இதுவரை பொதுமக்களிடையே தீவிரமாக பரவி வந்த தொற்று, தற்போது தேர்தல் களத்தில் தன்னுடைய வேட்டையை ஆரம்பித்துள்ளது அரசியல் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் பிரச்சாரம், பொதுக்கூட்டம், மாநாடு, வாக்கு சேகரிப்பு என அரசியல் கட்சி தலைவர்கள் தீயாய் வேலை செய்து வருகின்றனர்.  இதுபோன்ற சமயங்களில் ஆயிரக்கணக்கில் பொது மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மக்கள் நீதி மய்யத்தில் அண்ணாநகர் வேட்பாளர் பொன்ராஜ், வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபு ஆகியோருக்கும், தேமுதிகவில் சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், தேமுதிக துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ், விருகம்பாக்கம் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி, திருவள்ளூர் அமமுக வேட்பாளர் குரு ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இப்படி கட்சி பாகுபாடு இல்லாமல் வேட்பாளர்களை ஓட ஓட விரட்டிய கொரோனா தற்போது திமுகவிற்குள் நுழைந்துள்ளது அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்ட கடலூர் குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.