கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றில் மூழ்கி 3 பேர் பலி! கோவை அருகே நடந்த துயரம்
கோவை அருகே, ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த கார், 120 அடி ஆழ கிணற்றில் பாய்ந்ததில் 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கோவை அருகேயுள்ள போளுவாம்பட்டி – தொண்டாமுத்தூர் சாலையில் இன்று (செப்.9) காலை 6.15 மணிக்கு ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. அதில் 4 இளைஞர்கள் இருந்தனர். தென்னமநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே உள்ள வளைவில் கார் திரும்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கிருந்த தோட்டத்துக்கு கேட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த 120 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்தது. அதில் 75 சதவீதம் தண்ணீர் இருந்தது. கிணற்றுக்குள் பாய்ந்த வேகத்தில் கார் மூழ்கத் தொடங்கியது. காரில் ஓட்டுநர் இருக்கையில் இருந்த இளைஞர்் மட்டும் கதவை திறந்து, கிணற்றில் இருந்து வெளியே வந்தார். மற்ற மூவரும் கிணற்றுக்குள் காருடன் மூழ்கினர்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டுநர்கள் தொண்டாமுத்தூர் போலீஸாருக்கும், தொண்டாமுத்தூர் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றுக்குள் மூழ்கிய நபர்கள் மற்றும் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொண்டாமுத்தூர் போலீஸார் தப்பிய இளைஞரிடம் விசாரித்தனர். அதில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீஸார் கூறியதாவது: வடவள்ளியைச் சேர்ந்தவர் ரோஷன்(18). இவரது நண்பர்கள் வடவள்ளியைச் சேர்ந்த ஆதர்ஷ்(18), ரவி(18), நந்தனன்(18). ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக இவர்கள் நால்வரும் நேற்று கோவை – சிறுவாணி சாலையில் உள்ள ஒரு தனியார் கிளப்புக்கு வந்தனர். நேற்று இரவு அங்கேயே தங்கி ஓணம் பண்டிகையை கொண்டாடினர். பின்னர், வீட்டுக்கு செல்வதற்காக நால்வரும் இன்று காலை காரில் புறப்பட்டுள்ளனர். தென்னமநல்லூர் அருகே வந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் பாய்ந்தது. காரை ஓட்டி வந்த ரோஷன் கதவை திறந்து தப்பி விட்டார். மற்ற மூவரும் நீரில் மூழ்கிவிட்டனர். நீரில் மூழ்கி மூவரும் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தற்போது ரவியின் சடலம் மீட்கப்பட்டு விட்டது. நீரில் மூழ்கி உயிரிழந்த மற்ற இருவரையும் தொடர்ந்து தேடி வருகிறோம். இவ்வாறு போலீஸார் கூறினர்.