கழிவுநீர் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுக்க முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!!
கழிவு அகற்றும் பணியில் ஈடுபடுவோர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற, “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்” என்ற புதிய திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
இனி வருங்காலங்களில், இறப்புகள் நேருமானால் அதற்குக் காரணமான அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழிவுநீர் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கடந்த பட்ஜெட் உரையில், கழிவுநீர் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடைகளில் கழிவு அகற்றும் பணியில் ஈடுபடுவோர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் பொருட்டு, “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்” என்ற புதிய திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக, சென்னை பெருநகரப் பகுதியில் நவீன இயந்திரங்களையும், கருவிகளையும் பயன்படுத்தி, தூய்மைப் பணியாளர்களைத் தொழில்முனைவோர்களாக மாற்றி, கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தினை அடுத்த நான்கு மாதங்களில் முழுமையாக செயல்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என்று நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், இந்தப் புதிய திட்டத்திற்காகக் காத்திராமல், இனிமேல் தமிழ்நாட்டில் எந்தவொரு இறப்பும், கழிவுநீர் சுத்திகரிப்பால் நேரக்கூடாது என்பதை மனதில் கொண்டு, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பேரூராட்சித் துறை அலுவலர்கள் செயல்பட வேண்டும் என்று இந்தத் தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த இறப்புகளைத் தவிர்க்கும்பொருட்டு, விரைவில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டுமென்று, கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், இந்தப் பணியில் ஈடுபடுபவர்களிடமும், இப்பணியில் தூய்மைப் பணியாளர்களை ஈடுபடுத்துவோர்களிடமும், என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிக்க வேண்டுமென்று ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இனி வருங்காலங்களில், தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறி, அதன் வாயிலாக, இறப்புகள் நேருமானால் அதற்குக் காரணமான அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு இடம் அளிக்காத வகையில் தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள் அனைவரும், இதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய மனிதநேய உணர்வுடன் இப்பணியில் கவனமாகவும், சிறப்பாகவும் செயல்பட கேட்டுக் கொள்கிறேன்.