தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு!!

0
121

தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு

நாடு முழுவதும் குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களாக இந்தியாவை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று பரவலால் பலக்கட்ட ஊரடங்குகள் நாடெங்கும் அமல்படுத்தப்பட்டன. அதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்ததன் காரணமாக ஊரடங்குகள் படிப்படியாக நீக்கப்பட்டன.

இந்நிலையில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த வைரசான ஒமைக்ரான் தற்போது நாடெங்கும் வேகமாக பரவி வரும் காரணத்தால் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றானது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.

அந்த வகையில் தமிழகத்திலும் இதன் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் 397 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 103 பேரும், கோவையில் 73 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று சென்னையில் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பொதுமக்கள் அதிகமாக கூடக்கூடிய மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

மேலும் சென்னையில் கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டால் மட்டுமே தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என சென்னை மாநகராட்சி பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இதனை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவும் பரிசீலித்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் திருவிழாக்கள், பொதுக்கூட்டங்கள், திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சி ஆகியவைகளுக்கு ஏற்கனவே விதித்திருந்த  கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைபடுத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.