விமான போக்குவரத்து ஊழியருக்கு கொரோனா! உடனடியாக தனிமைபடுத்த நடவடிக்கை தீவிரம்.!
டெல்லி: விமான போக்குவரத்து துறை அமைச்சக ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதித்த நபர் கடந்த 15 ஆம் தேதி வரை அலுவலகத்தில் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிற அலுவலக ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருக்க வாய்ப்புள்ள காரணத்தால் அந்த ஊழியருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு குடியரசுத் தலைவர் மாளிகை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அங்கிருந்த 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களை தனிமைப்படுத்தி சோதனை செய்ததும் குறிப்பிடத்தக்கது. இதன்பின்னர் இதற்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் தரப்பில் மறுப்பு கூறப்பட்டது.
இதேபோல் நாடாளுமன்றத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகிறது. இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில் விமான போக்குவரத்து அமைச்சக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்காரணமாக அவருடன் பணியாற்றியவர்களை மத்திய அரசு தனிமைபடுத்துமாறு கூறியுள்ளது.
இந்தியா நாடு முழுவதுமான கொரோனா பாதிப்பு 19 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றில் இருந்து 3,869 பேர் மருத்துவ சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் மேலும் பரவி வருகிறது. தமிழகத்தில் 1,596 பேர் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.