டீ கடையில் ருசி பார்த்த மொறு மொறு “கீரை போண்டா” – வீட்டு முறையில் செய்வது எப்படி?
நமக்கு பிடித்த எண்ணெய் பண்டங்களில் ஒன்று கீரை போண்டா.மழை நேரத்தில் உண்ண தகுந்த பண்டம் இது.இந்த சுவையான காரமான கீரை போண்டாவை டீ கடை சுவையில் செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
*அரை கீரை – 1 கட்டு
*கடலை மாவு – 1 கப்
*சோள மாவு – 1/2 கப்
*பெரிய வெங்காயம் – 2 நறுக்கியது
*இஞ்சி – சிறு துண்டு
*பச்சை மிளகாய் – 4 (நறுக்கியது)
*பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
*பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
*உப்பு – தேவைக்கேற்ப
*எண்ணெய் – போண்டா பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:-
முதலில் 1 கட்டு அரை கீரையை எடுத்து நன்கு சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.அதேபோல் 2 பெரிய வெங்காயம்,4 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்னர் 1 துண்டு இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
அடுத்து ஒரு பெரிய பாத்திரம் எடுத்து அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கீரை,வெங்காயம் மற்றும் மிளகாயை சேர்த்து கொள்ளவும்.பின்னர் துருவி வைத்துள்ள இஞ்சியை சேர்த்து சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு அதில் எடுத்து வைத்துள்ள 1 கப் கடலை மாவு மற்றும் 1/2 கப் சோள மாவு,1 சிட்டிகை பேக்கிங் சோடா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி போண்டா சுடும் பதத்திற்கு மாவை கலக்கி கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் போண்டா சுடுவதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.எண்ணெய் நன்கு சூடேறியதும் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும்.பின்னர் தயார் செய்து வைத்துள்ள போண்டா மாவு கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போடவும்.
போண்டா நன்கு வெந்து வந்ததும் அதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.இவ்வாறு அடுத்தடுத்து போண்டா போட்டுக் கொள்ளவும்.இந்த முறையில் போண்டா செய்தால் டீ கடை சுவையில் இருக்கும்.இந்த போண்டாவை கார சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் வைத்து சாப்பிட்டால் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்.