தயவுசெய்து உதவி செய்யுங்க! கையேந்திய முதலமைச்சர்!

Photo of author

By Mithra

தயவுசெய்து உதவி செய்யுங்க! கையேந்திய முதலமைச்சர்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. தொற்று பரவல் அதிகரித்து வரும் அதே நேரத்தில், தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவனைகளிலும் ஆக்சிஜன் மிகக் குறைந்த அளவே உள்ளன.

டெல்லியில் மருத்துவமனைக்கு செல்லும் பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் கொடுத்து சிகிச்சை அளிக்கும் நிலைக்கு கொரோனா வைரஸ் இழுத்துச் சென்றுள்ளது. இதனால், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது. மத்திய அரசிடம் ஆக்சிஜன் கேட்ட நிலை போக, மற்ற மாநில முதலமைச்சர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார்.

அதில், தங்கள் மாநிலங்கள் கூடுதலாக வைத்துள்ள ஆக்சிஜனை, டெல்லிக்கு கொடுத்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், நேற்று பெரிய தொழிற்சாலைகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தங்கள் நிறுவனங்கள் ஆக்சிஜனையும், ஆக்சிஜன் உருளைகளையும் தயவு செய்து டெல்லி அரசுக்கு கொடுத்து உதவுங்கள் என்று கூறியுள்ளார். மேலும், தங்களால் இயன்ற உதவிகளை டெல்லிக்கு செய்ய வேண்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிச்சையெடுத்தாவது மக்களின் உயிரை காப்பாற்றுங்கள் என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொழிற்சாலைகளிடம் கெஞ்சி உதவி கேட்டிருப்பது, அம்மாநிலம் எந்த அளவுக்கு மோசமான சூழ்நிலையில் உள்ளது என்பது தெரிகிறது.