சென்னை வந்த தோனி! IPL ஏலத்தில் பங்கேற்பாரா?
ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை வந்துள்ளார். ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது.
அதில், ஐ.பி.எல். கிரிக்கெட்டின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி ரூ.12 கோடிக்கும், ரவீந்திர ஜடேஜா ரூ.16 கோடிக்கும், மொயீன் அலி ரூ.8 கோடிக்கும் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ரூ.6 கோடிக்கும் என சென்னை அணியின் நிர்வாகம் அவர்களை தக்கவைத்து கொண்டது.
இவர்களுக்குரிய ஊதியம் போக மீதமுள்ள ரூ.48 கோடியை கொண்டு தான் தேவையான எஞ்சிய வீரர்களை ஏலத்தில் அணி நிர்வாகம் எடுக்க வேண்டும். ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின.
இதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இந்த மெகா ஏலம் நடைபெறும் என்பதை ஐபிஎல் தலைவர் ப்ரிஜேஷ் பட்டேல் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ஐ.பி.எல் கிரிக்கெட்டில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு அணிகளும் ஐ.பி.எல் மெகா ஏலத்திற்கு முன்பாக தங்களுடைய மூன்று வீரர்களையும் தேர்வு செய்து கடந்த வாரம் அறிவித்தன. இதையடுத்து, ஐபிஎல் மெகா ஏலம் வருகிற பிப்ரவரி மாதத்தில் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், சென்னை அணியின் கேப்டன் தோனி சென்னை வந்துள்ளார். ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்தெந்த வீரர்களை எவ்வளவு தொகைக்கு எடுக்கலாம் என்பது குறித்து தோனி சென்னை அணி நிர்வாகிகளிடம் ஆலோசிக்க உள்ளார். இதனிடையே தோனி ஏலத்திலும் பங்கேற்பாரா என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.