கோவை மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணியையும் திமுக செய்யவில்லை – பொள்ளாச்சி ஜெயராம் குற்றச்சாட்டு!!

Photo of author

By Divya

கோவை மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணியையும் திமுக செய்யவில்லை – பொள்ளாச்சி ஜெயராம் குற்றச்சாட்டு!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றைய தினத்தில் அம்மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை ஏற்க வேண்டிய மாவட்ட ஆட்சியருக்கு பதில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினார்.

இதில் ஆர். நடராஜன் எம்.பி, சண்முகசுந்தரம் எம்.பி, எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டம் நிறைவு பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் ஆளும் திமுக அரசை கடுமையாக சாடினார்.

எந்த காலத்திலும் கோவை மாவட்டத்தில் திமுக வெல்லாது என்பதை உணர்ந்து தான் திரு. ஸ்டாலின் அவர்கள் இந்த கோவை மாவட்டத்திற்கு எந்த ஒரு நலத்திட்ட பணிகளையும் செய்யாமல் இருக்கிறார். கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பெரும்பாலான நலத்திட்டங்கள் இந்த திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடியார் கோவை மாவட்ட வளர்ச்சி பணிகளுக்காக ரூ.500 முதல் ரூ.1000 கோடி வரை ஒதுக்கினார். ஆனால் அதன் பின் ஆட்சி பொறுப்பேற்ற இந்த திமுக வளர்ச்சி பணிக்கான பணத்தை சுரண்டி விட்டது. திமுகவின் ஊழலை நன்கு உணர்ந்ததால் தான் கோவை மக்கள் எப்பொழுதும் அதிமுகவை ஆதரிக்கின்றனர். அதிமுக கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக திகழ்கிறது. இதனை நன்கு உணர்ந்த திமுக கோவை மாவட்ட மக்களை கண்டுகொள்ளாமல் அத்திகடவு குடிநீர் திட்டம், மேட்டுப்பாளையம் புறநகர் சாலை உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது.

மேலும் இந்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு ஆட்சியர் வராமல் இருந்தது அதிர்ச்சி மற்றும் வருத்தம் தரும் செயலாக உள்ளது. இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்கள், அடிப்படை வசதி குறித்த கேள்விக்கு முறையான பதில் கிடைக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வராததன் மூலம் கோவை மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதை புரிந்து கொள்ள முடிகிறது என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.