நோய்த்தொற்று பரவல்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர்!

0
55

தமிழகத்தில் நோய் தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட்டு விடாத விதத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு காணொளியின் மூலமாக அறிவுறுத்தி இருக்கின்றார். அவர் பேசுகையில் ,நோய்த்தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தி இருக்கின்றோம். கட்டுப்படுத்தி இருக்கிறோமே தவிர அதற்கு முழுமையாக முற்றுப் புள்ளி வைக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

நோய் தொற்று ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவும் நோயாக இருப்பதன் காரணமாக, அதனை எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் முழுமையாக அதற்கு தீர்வு காண இயலவில்லை. முழுமையாக கட்டுப்படுத்தி விட்டதாக கருதப்பட்ட உலக நாடுகளில் கூட அந்த தொற்று மீண்டும் பரவ ஆரம்பித்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

முழுமையான தளர்வுகள் இல்லாத ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் நோய் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் இந்த நோய்த்தொற்று மீண்டும் மெல்ல பரவத் தொடங்கியிருக்கிறது. இதனை கவனத்தில் கொண்டு பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒன்றாக கூடுவதன் மூலம் நோய்த்தொற்று பரவலுக்கு பொதுமக்களே காரணமாக இருக்க வேண்டாம் என்று மீண்டும், மீண்டும், தமிழக மக்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். அதோடு மறுபடியும் முழுமையான ஊரடங்கு போடும் ஒரு சூழ்நிலையை பொதுமக்கள் ஏற்படுத்திவிட வேண்டாம் என்பதை சற்று கடினமாகவே நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

நோய்த்தொற்று பரவலின் மூன்றாவது அலையை மட்டுமல்ல எப்படிப்பட்ட அலை வந்தாலும் அந்த வைரஸை எதிர்கொள்வதற்கான திறன் தமிழக அரசுக்கு இருக்கிறது. அதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளும் தயார் நிலையில் இருக்கிறது. அதற்காக நோய்த்தொற்று பரவலை விலை கொடுத்து வாங்கி விட இயலாது என்பதை பொதுமக்களுக்கு அறிவுரையாக தெரிவிக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

நோய் தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலைகளை விடவும், மூன்றாவது அலை மிகக் கடுமையானதாக இருக்கும் ஸ்பானிஷ் காய்ச்சலைப் போல இருக்கும் என்று டாக்டர்கள் தெரிவிப்பதை அச்சுறுத்துவதாக நினைக்க வேண்டாம். நமக்கு தரப்படுகின்ற எச்சரிக்கையாக நாம் எடுத்துக்கொள்வோம். ஜிகா வைரஸ், டெல்டா ப்ளஸ் என புது, புது நோய்கள் வர இருப்பதாக சொல்லப்படுகின்றது. இவை அனைத்தையும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.