நாமக்கல்லில் கொரோனா சிறப்பு வார்டு படுக்கையில் நாய்கள் படுத்திருந்ததால் அதிர்ச்சி!

Photo of author

By Mithra

நாமக்கல் அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டு படுக்கையில் நாய்கள் படுத்திருந்ததால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 வார காலமாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 719 நபர்கள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் நிரம்பியுள்ளன. இதனால், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 10 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வார்டில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் 2 நாய்கள் நோயாளியின் படுக்கையில் படுத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பணியில் இருந்த மருத்துவப் பணியாளர்களும் இதனை கண்டுகொள்ளாமல் இருந்தது பேரதிர்ச்சியாய் இருந்தது.