புகையிலை நிறுவனங்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் மருத்துவர் ராமதாஸ்

0
119

புகையிலை நிறுவனங்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் மருத்துவர் ராமதாஸ்

கடந்த காலங்களில் மது,புகையிலை மற்றும் சினிமா மோகத்திற்கு எதிராக போராடிய அரசியல் தலைவர் யாரென்றால் அது பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மட்டுமே. தேர்தல் நேரத்தில் அரசியலுக்காக மாறி மாறி கூட்டணி வைத்திருக்கிறார் என்ற குற்றசாட்டை எதிர்க்கட்சிகள் அவர் மீது சுமத்தினாலும் மக்கள் நலனுக்கான செயல்பாடுகள் மற்றும் போராட்டங்களில் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு இணையாக தமிழகத்தில் வேறு எந்த தலைவரையும் ஒப்பிட முடியாது.

இந்நிலையில் நாளை மே 31 உலக புகையிலை ஒழிப்பு நாளை முன்னிட்டு சிறுவர்களை புகை
அடிமையாக்கும் சிகரெட் நிறுவனங்களை தண்டிக்க வேண்டும் என்று காட்டமான அறிக்கையை மருத்துவர் வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

உலக புகையிலை ஒழிப்பு நாள் மே 31ஆம் தேதி கடைபிடிக்கப்படும் நிலையில், ‘‘புகையிலை உங்கள் மூச்சை எடுத்துச் செல்ல அனுமதிக்காதீர்(Don’t let tobacco take your breath away)’’ என்ற முழக்கத்துடன், நுரையீரல் நலனை காப்பாற்ற வேண்டும் (Tobacco and lung health) என்பதை இந்த நாளின் நோக்கமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், இம்முழக்கத்துக்கு முற்றிலும் மாறாக சென்னையில் சட்டவிரோத புகையிலை விளம்பரங்களை சிகரெட் நிறுவனங்கள் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

புகையிலையின் பிடியிலிருந்து மக்களை மீட்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் உலக புகையிலை ஒழிப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த நோக்கத்தையே சிதைக்கும் வகையில், ‘‘அடுத்த தலைமுறையினருக்காக புதியது உருவாகிறது (New is coming: For the Next Generation)’’என்ற வாசகத்துடன் ஐ.டி.சி நிறுவனம் சென்னை மாநகரம் முழுவதும் சிகரெட் விளம்பரங்களை செய்துள்ளது.

இந்த விளம்பரத்தை மேலோட்டமாக பார்க்கும் போது அதில் புதைந்துள்ள நச்சுக் கருத்துகள் நமக்கு புலப்படாது. இவ்விளம்பரத்தின் மூலம் ஐடிசி நிறுவனம் வெளிப்படுத்த விரும்பும் விஷயம் என்னவெனில், அடுத்த தலைமுறையினரான சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்காக புதிய வகை சிகரெட் ஒன்றை தங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது என்பது தான். இது பள்ளி மாணவர்களை புகைக்கு அடிமையாக்கும் அப்பட்டமான தூண்டுதலாகும். இது ஒன்றுக்கும் மேற்பட்ட வகைகளில் சட்டவிரோத செயல் ஆகும். சிறுவர்களை சீரழிக்கும் இவ்விளம்பரங்களை எந்த வகையிலும் மன்னிக்க முடியாது.

இத்தகைய விளம்பரங்கள் மிகவும் நுணுக்கமானவை என்பது மட்டுமின்றி, தங்களின் வணிகத்துக்காக அடுத்தத் தலைமுறையை சிதைக்கும் தன்மை கொண்டவை ஆகும். சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம், நுரையீரல் பாதிப்பு, தோல்நோய் என பலவகையான நோய்கள் ஏற்படுகின்றன. புகையிலை பயன்படுத்துவதால் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் 70 லட்சம் பேரும், இந்தியாவில் 12 லட்சம் பேரும் கொல்லப்படுகின்றனர். இந்தியாவில் ஆண்டு தோறும் இறக்கும் 12 லட்சம் பேரும் புகையிலை வாடிக்கையாளர்கள் என்பதால், அவர்களை ஈடுகட்டுவதற்காக புதிய வாடிக்கையாளர்களை உருவாக்க வேண்டிய தேவை சிகரெட் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. சிறுவர்களை வாடிக்கையாளர்களாக்கவே இத்தகைய விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.

சிகரெட்டுக்கு மாணவர்களை அடிமையாக்க கையாளப்படும் உத்திகள் பற்றி அறிவதற்காக சென்னை கோவை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் உட்பட நாடெங்கும் 20 மாவட்டங்களில் உள்ள 243 பள்ளிகளைச் சுற்றி சிகரெட் விற்பனை நடைபெறும் 487 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 225 இடங்களில் பள்ளிக் குழந்தைகளை குறிவைத்து சிகரெட் சந்தைப்படுத்தப்படுவதும், காட்சிப்படுத்தப்படுவதும் தெரியவந்தது. இவற்றில் 91 விழுக்காடு இடங்களில் சிகரெட்டுகள் குழந்தைகளின் கண்களில் எளிதில் படும் வகையில் ஒரு மீட்டர் தொலைவில் வைக்கப்பட்டிருந்தன. 54% கடைகளில் புகைப்பழக்கத்தின் தீமைகள் குறித்த எந்த எச்சரிக்கையும் வைக்கப்படவில்லை. 90 விழுக்காடு கடைகளில் மிட்டாய்கள், பொம்மைகள் ஆகியவற்றையொட்டி சிகரெட் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்தது. இவை மாணவர்களையும், குழந்தைகளையும் புகைக்கு அடிமையாக்கும் நோக்கம் கொண்டவை. இந்த உத்திகளை சிகரெட் நிறுவனங்களே வகுத்துத் தருகின்றன.

இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் புகையிலை விளம்பரங்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன. தடையை மீறி விளம்பரம் செய்வோர் மீது ஐந்தாண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டங்களையும், விதிகளையும் காற்றில் பறக்கவிட்டு சிறுவர்களை சீரழிக்கும் வகையில் சட்டவிரோத விளம்பரங்களை புகையிலை நிறுவனங்கள் துணிச்சலாக செய்வது ஆட்சியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் விடப்பட்ட அப்பட்டமான சவால் ஆகும்.

இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சட்டவிரோத விளம்பரங்களை அப்புறப்படுத்த வேண்டும். இந்த விளம்பரங்களை வைத்த ஐடிசி சிகரெட் நிறுவனத்தின் மீது குற்றவழக்கு தொடுத்து, குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தனி உரிமம் பெற வேண்டும் என்ற விதியை கடுமையாக செயல்படுத்த வேண்டும்; அதன்மூலம் தமிழ்நாட்டு சிறுவர்களின் எதிர்காலத்தை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Cricket world cup 2019 opening ceremony to begin at London today News4 Tamil Online Tamil News Sports News Cricket News Live Updates Today2
Cricket-world-cup-2019-opening-ceremony-to-begin-at-London-today-News4-Tamil-Online-Tamil-News-Sports-News-Cricket-News-Live-Updates-Today2
author avatar
Parthipan K